டெல்லி சிஜேபி போராட்டம் பற்றி பாகிஸ்தான், வங்கதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, இளைஞர் அமைப்பான 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • எழுதியவர், பிபிசி மானிடரிங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவில் கல்வியில் சீர்திருத்தம் செய்ய கோரி இளைஞர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் குறித்து பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஊடகங்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, கல்வியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, இளைஞர் அமைப்பான 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் அரசிடம் முன்வைத்துள்ளனர்.

ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற சிஜேபி-ன் நாடாளுமன்ற பேரணிக்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.

டெல்லியில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். அந்தப் போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் நிறைந்திருந்தனர் . அவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசியது.

ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் வரை நடைபெற்ற இந்தப் பேரணி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்தியில் நடைபெற்றது.

நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாங்சுக் போராட்டம் நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், தேர்வு வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு "விரைவான மற்றும் கடுமையான தண்டனையை" உறுதி செய்வதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என ஜூலை 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்தார்.

இருப்பினும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை சிஜேபி கைவிடவில்லை .

மத்திய அரசு மீதான அழுத்தம்

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை சிஜேபி கைவிடவில்லை .

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சில ஊடகங்கள் மாணவர்களின் போராட்டத்தை மோதி அரசுக்கு ஒரு பெரும் அழுத்தம் என வர்ணித்துள்ளன (குறியீட்டுப் படம்).
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான 'டான்' , ஜூலை 23 அன்று, "இந்தியாவில் அதிருப்தி வெளிப்படையாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

"சாதாரண இந்திய இளைஞர்களின் எதிர்காலம் என்ன?" என்ற அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க அரசாங்கம் திணறுவதால், அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியின் பிடி தற்போது தளர்ந்து வருவதாகத் தெரிகிறது" என்று டான் தலையங்கம் எழுதியது.

அனைத்துப் போராட்டங்களையும் அடக்குமுறை மூலம் ஒடுக்குவது என்பது இப்போது "மிகவும் கொடூரமானதாக" மாறியுள்ளது என்று அந்த செய்தி கட்டுரை கூறுகிறது.

"தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான பெரும்பாலான வழிகள் பாதுகாப்பற்றதாகவோ அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாகவோ இருக்கும் இந்த நேரத்தில், இந்த இயக்கம் ஓரளவிற்கு மக்களை பயத்திலிருந்து விடுவித்துள்ளது" என்று டான் எழுதியுள்ளது.

பாகிஸ்தானின் மற்றொரு முன்னணி நாளிதழான 'எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்', "காக்ரோச் ஜனதா கட்சிக்கு (சிஜேபி) அரசாங்கம் அளித்து வரும் பதில், இந்தியா ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்வதன் யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது" என்று எழுதியுள்ளது.

ஜூலை 21 அன்று உருது செய்தி தொலைக்காட்சியான 'ஜியோ நியூஸ்' நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் ஷாஜெப் கான்சாதா பேசுகையில், "இந்தியாவில் மாணவர்களின் போராட்டங்கள் இப்போது பெரிய அளவிலான அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியுள்ளன" என்று கூறினார்.

இந்திய அரசு இந்த இயக்கத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேசவிரோத சக்திகள் என்று அழைத்ததாகவும் அவர் கூறினார்.

'ஏஆர்ஒய் நியூஸ்' செய்தி வாசிப்பாளர் கம்ரான் கான் பேசுகையில், இந்தியா தனது மிகப்பெரிய இளைஞர் இயக்கங்களில் ஒன்றை கண்டுள்ளது என்றும், இது மோதி அரசுக்கு ஒரு பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது என்றும் கூறினார்.

டெல்லியில் சிஜேபி ஆதரவாளர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் காரணமாக இந்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாக இலங்கையின் செய்தி வலைத்தளமான 'அடா தெரனா' ஜூலை 22 அன்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், BBC MONITORING

நேபாளத்தின் முன்னணி நாளிதழான 'தி காத்மண்டு போஸ்ட்' , ஜூலை 22 அன்று எழுதிய செய்தியில், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொடர்ச்சியாக தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளால் இந்திய இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கொந்தளிப்பை சிஜேபி-யின் வளர்ந்து வரும் செல்வாக்கு பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இளைஞர்கள் முக்கிய வாக்கு வங்கியாகக் கருதப்படும் நிலையில், இந்த விவகாரம் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சிக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக அந்த செய்தி கூறியுள்ளது.

டெல்லியில் சிஜேபி ஆதரவாளர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் காரணமாக இந்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாக இலங்கையின் செய்தி வலைத்தளமான 'அடா தெரனா' ஜூலை 22 அன்று தெரிவித்துள்ளது.

"சமீபத்திய ஆண்டுகளில், மோதிக்கு எதிராக பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இந்த இயக்கம் மாறியுள்ளது" என்று அது கூறியுள்ளது.

வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான 'தி டெய்லி ஸ்டார்' ஜூலை 23 அன்று வெளியிட்ட கட்டுரையில், ஜூலை 20 அன்று நடைபெற்ற சிஜேபி போராட்டம் பல ஆண்டுகளில் மோதி அரசுக்கு சவால் விடுத்த மிகப்பெரிய போராட்டம் என்றும், இந்த இயக்கம் விரைவில் முடிவுக்கு வரும் போல் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற பிற முக்கிய இயக்கங்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்துள்ள அந்தக் கட்டுரை, குடியுரிமைச் சட்டம் அல்லது வேளாண் சட்டங்களுக்கு எதிரான இயக்கங்களை விட சிஜேபி-யின் போராட்டம் ஆழமான மற்றும் நீண்டகால சவாலை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

'இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலன்களுடன் தொடர்புடையது அல்ல, மாறாக ஒரு தலைமுறையின் எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையது' என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.

ஜூலை 21 அன்று, வங்கதேசத்தின் பல மாணவர் அமைப்புகள் இந்தியாவின் மாணவர் இயக்கத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு