'தேர்வு சீர்திருத்தம்' குறித்து பிரதமர் மோதி முக்கிய அறிவிப்பு - நந்தன் நிலேக்கனிக்கு புதிய பொறுப்பு

பட மூலாதாரம், narendramodi/instagram
பிரதமர் நரேந்திர மோதி, பிரபல தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேக்கனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளார்.
அந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை பதிவிட்ட பிரதமர் மோதி, "மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்ட புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்," என்று கூறினார்.
அவர் மேலும், "ஆனால் நாம் எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். தேர்வு முறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகபட்சமாக உறுதிப்படுத்த வேண்டும். இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேக்கனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், "இந்தப் பணிக்குழு தேர்வு முறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்தும். அதன் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்," என்று தெரிவித்தார்.
மோதி என்ன கூறினார்?

பட மூலாதாரம், @narendramodi X/ANI Video Grab
நாடு முழுவதும் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை இரவு 11:52 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
"நண்பர்களே" என்று கூறி அவர் தனது உரையைத் தொடங்கினார்.
அந்தக் காணொளியில் பேசிய பிரதமர் மோதி, "நண்பர்களே, வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல என்பதை நான் அறிவேன். இது கோடிக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்ததிலிருந்து கடந்த இரண்டரை மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.
அவர் மேலும், "ஆனால் அதில் திருப்தியடையும் வகையிலானவர்கள் நாங்கள் அல்ல. அதனால்தான் இன்று விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து துறைகளுக்கு நான் அறிவுறுத்தினேன். கடுமையான தண்டனைகள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் தொடர்பான வரைவுத் திட்டத்தை துறைகள் தயாரித்து எனக்கு வழங்கியுள்ளன. அந்த வரைவுத் திட்டம் நாளை அமைச்சரவையில் விவாதிக்கப்படும்," என்றார்.
"அமைச்சரவை சகாக்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அது இறுதி செய்யப்படும். திங்கள்கிழமை முதல் நாடாளுமன்றத்தின் இரண்டாவது வார அமர்வு தொடங்க உள்ளதால், அந்த மசோதாவை விரைவாக அவையில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.
அதன் மறுநாளும் இளைஞர்களுக்கு காணொளி ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோதி, ஆலோசனைகள் மற்றும் கருத்துகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அரசுக்கு அதிகரித்த அழுத்தம்

பட மூலாதாரம், ANI
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்த இளைஞர் போராட்டம் டெல்லியில் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பாட்னா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி, தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவையும் கல்வி சீர்திருத்தங்களையும் கோரி போராட்டம் நடத்தினர்.
போராட்டங்கள் அரசுக்கு குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில், சிஜேபி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியது.
கல்வி அமைச்சரின் ராஜிநாமா மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான அழுத்தம் தெருக்களில் மட்டும் அல்லாமல், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தன.
திங்கள்கிழமை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியபோது, இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் முக்கிய பிரச்னையாக மாறியது.
அதே நாளில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த சிஜேபி அழைப்பு விடுத்தது. ஆனால், அதன் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியபோது, அவர்களைத் தடுக்க காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்தனர். சில காவல்துறையினரும் வன்முறையால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கல்வி அமைச்சரின் ராஜிநாமாவை வலியுறுத்தி, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































