'வாராய் நீ வாராய்' உள்பட திருச்சி லோகநாதன் குரலில் இன்றும் ஒலிக்கும் 10 பிரபல பாடல்கள்

- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று திருச்சி லோகநாதனை கொண்டாடுகிறார்கள்.
ஆரம்ப கால தமிழ் சினிமாவில் டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் , டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் போன்றவர்கள் கோலோச்சினாலும், இவர்களுக்கு எல்லாம் மூத்தவர் திருச்சி லோகநாதன்.
அந்த காலத்தில் நடிகர்களே சொந்த குரலில் பாடுவது வழக்கம். தியாகராஜ பாகதவர், கிட்டப்பா, பி.யூ.சின்னப்பா உட்பட பலர் அப்படிதான் நடித்தார்கள். அதை உடைத்தவர் திருச்சி லோகநாதன்.
23 வயதில் பாட ஆரம்பித்தார்
ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில், 1947ல் வெளியான ராஜகுமாரி படத்தில் தனது 23வது வயதில் காசினி மேல் நாங்கள் என்ற பாடலை முதலில் பாடினார் திருச்சி லோகநாதன். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்த இந்த பாடலில் நடித்தவர் நம்பியார். அதை தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு பாடியிருக்கிறார்.
கோவிந்தராஜூலு நாயுடு, வேதா, டி.ஜி. லிங்கப்பா, எஸ்.வி.வெங்கட்ராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, டி.ஆர்.ராமநாதன், தக்ஷ்ணாமூர்த்தி, கண்டசாலா, ஏ.எம்.ராஜா, ஜி.ராமநாதன் என்று பல இசையமைப்பாளர்களிடம் கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களை பாடியவர், 1989-ஆம் ஆண்டு காலமானார். இன்று திருச்சி லோகநாதனின் பிறந்தநாள். அவரது மகனும், பாடகருமான டி.எல்.தியாகராஜனிடம் பிபிசி சார்பில் பேசினோம். தனது தந்தையின் இசைப்பயணம் குறித்து அவர் ஆர்வமுடன் பேச ஆரம்பித்தார். இனி அவரது வார்த்தைகளில்.
முதல் பாடல்
அப்பாவின் சொந்த ஊர் திருச்சி. மலைக்கோட்டை பக்கத்தில்தான் வளர்ந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம், திருச்சி நடராஜ பிள்ளையிடம் கர்நாடகம் சங்கீதம் கற்றுக்கொண்டு, நாடக கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறார். 1947ல் வெளியான ராஜகுமாரி படத்தில் தனது 23 வயதில் காசினிமேல் நாங்கள் என்ற பாடல் மூலம் பின்னணி பாடகர் ஆனார். அந்த படத்தில்தான் எம்ஜிஆர் ஹீரோவாக அறிமுகம் ஆனார். வசனம் எழுதியவர் கருணாநிதி. ஆனாலும், இந்த பாடலில் நடித்தவர் நம்பியார்தான்.
1950களில் வந்த மந்திரிகுமாரியில், ஜி.எம்.ராமநாதன் இசையில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆக்கியது. அந்த படத்திலும் எம்ஜிஆர் நடித்தாலும் அந்த பாடலில் இடம் பெற்றவர் எஸ்.ஏ.நடராஜன். உலவும் தென்றல் என்ற பாடலும் அதில் பிரபலம் ஆனது. அந்த படத்தின் மூலம் எம்ஜிஆர், கருணாநிதி, அப்பா ஆகியோர் பிரபலம் ஆனார்கள். ஜி.எம்.ராமநாதன் அந்த காலத்தில் பிரபல இசையமைப்பாளர். அவர் பாடல்களை பாடி வளர்ந்த அப்பா, பிற்காலத்தில் அவர் இசையில் சாகாவரம் பெற்ற பல பாடல்களை பாடினார்.

எம்.எஸ்.வியின் முதல் பாடல்
பிரபல இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவின் உதவியாளராக பின்னாளில் பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்நாதன் பணியாற்றினார். அவர் அபிமன்யூ படத்துக்காக இசையமைத்த 'புது வசந்தமாம் வாழ்விலே' என்ற முதல் பாடலை அப்பாதான் பாடினார். ஆனால் அந்த படத்தில் எம்.எஸ்.வி. பெயர் இடம் பெறவில்லை.
"எம்.எஸ்.வியின் ட்யூன் என்று சொன்னால் அதை நீக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் படம் வெளியானபின் உண்மையை சொன்னேன்" என்று பின்னாளில் குருநாதர் சுப்பையா நாயுடு கூறினார். எம்.எஸ். வி இசையமைப்பாளரான பின்னரும் அப்பா அவருக்காக பல பாடல்களை பாடினார். சங்கர் கணேசுக்கும் கூட அவர் பாடியிருக்கிறார்.
எம்ஜிஆருக்கு உதவிய குடும்பம்
மெலோடியும் பாடுவார், டூயட்டும் பாடுவார், உச்ச ஸ்தாயிலும் பாடுவார். குறிப்பாக, 'வெள்ளிப் பனிமலை' மீது அந்த ரக பாடல். ஆரம்ப காலத்தில் சர்வாதிகாரி, குலேபகாவலி உட்பட பல படங்களில் எம்ஜிஆருக்காக அப்பா பாடியிருக்கிறார்.
அந்த காலத்தில் பிரபல நடிகையாக இருந்த ராஜகாந்தம் மகள் ராஜலட்சுமியைதான் என் அப்பா திருமணம் செய்தார். நாடகங்கள் கொடி கட்டி பறந்த காலத்தில் கஷ்டத்தில் இருந்த எம்ஜிஆர். அவர் அண்ணன் சக்ரபாணி, அவர் அம்மா ஆகியோருக்கு என் பாட்டி உதவியிருக்கிறார். பிற்காலத்தில் 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகத்தில் என்னுடைய இன்னொரு தாய் என பாட்டியை புகழ்ந்து இருக்கிறார். அந்த அளவுக்கு எங்கள் குடும்பத்துடன் எம்ஜிஆர் பழக்கம். என் பாட்டியை ஆண்டவனே என எம்ஜிஆர் அழைப்பார்.

சம்பளம் வாங்க மறுத்தவர்
ஜி.ராமநாதன் கம்போசிங் சற்று கடினமாக இருக்கும். அதை அழகாக, அனுபவித்து பாடுவார் அப்பா. அதனால் இசைத்தென்றல் பட்டத்தை காமராஜர் கொடுத்து பாராட்டினார். அப்பாவுக்கு தேச பக்தி அதிகம்,
கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் "என்று தணியும் சுதந்திர தாகம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" ஆகிய பாடல்களில் உருகி இருப்பார். அதை கேட்ட சிவாஜிகணேசன் திருச்சி லோகநாதன் பாடலே பாதி படத்தை வெற்றி ஆக்கிவிட்டதே என்றாராம்.
அப்பா பண விஷயத்தில் கொஞ்சம் கறார். அந்த காலத்தில் ஒரு பாடலுக்கு 750 ரூபாய் வாங்குவார். ஆனால், துாக்குதுாக்கி பட கம்பெனி 8 பாடல்களுக்கு அவ்வளவு தர தயாராக இல்லை. அப்போது அப்பா அந்த பாடலை டி.எம்.செளந்திரராஜனுக்கு சிபாரிசு செய்தார். அவர் வாழ்க்கையி்ல மாற்றத்தை ஏற்படுத்திய படம் அது.
ஆனால், கப்பலோட்டிய தமிழன் படத்துக்கு 3 பாடல் பாடியும் அவர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார். "நான் பாரதியார் பாடல்களை பாடி வளர்ந்தவன். ஒரு சுதந்திர போராட்ட கதைக்கு பணம் வாங்குவதா" என அவர் கேட்டது அப்போது பிரபலம்.
நான், சகோதரர்கள் டி.எல்.மகாதேவன், தீபன் சக்வர்த்தி, என் மகள் தீபிகா, எங்கள் பேரப்பிள்ளைகள் என எங்கள் குடும்பத்தில் 10 பேர் இசைத்துறையில் இருக்கிறோம். எல்லாம் அப்பாவின் ஆசீர்வாதம். அவர் பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்த 10 பாடல்கள்.
1. நீ வாராய் நீ வாராய்

பட மூலாதாரம், YT/4k Old Classic Movie & Song
ஜி.ராமநாதன் இசையில் மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல். மருதகாசி எழுத, ஜிக்கியுடன் இணைந்து அப்பா பாடியிருந்தார். எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனத்தில் 1950ல் உருவான படம் இது. இந்த பாடலில் நடித்தவர் எஸ்.ஏ.நடராஜன்.
முதலில் இந்த பாடலை நீக்கவிடலாம் என தயாரிப்பு தரப்பில் நினைத்தார்களாம். ஆனால், தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் வெளியே வரும் போதே முணுமுணுக்க, இன்றும் ரசிக்கப்படுகிறது.
2. கல்யாண சமையல் சாதம்
மாயாபஜார் படம் முதலில் நினைவுக்கு வருவது இந்த பாடலும், ரங்கராவ் நடிப்பும்தான். அவ்வளவு ரசித்து பாடியிருப்பார் அப்பா. கண்டசாலா இசையில் தஞ்சை ராமையாதாஸ் வரிகளை உருவான இந்த பாடலை காட்சி படுத்தியவிதமே அவ்வளவு பிரமாண்டமாக, ரசனையாக இருக்கும்
இன்றைக்கும் குழந்தைகள் கொண்டாடும் இந்த பாடல் வெளியான ஆண்டு 1957. பலர் பாடி செட் ஆகாத நிலையில் லோகு பாட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் விரும்ப, அது நடந்து இருக்கிறது.
3. புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
திருமணமாகி செல்லும் செல்ல தங்கைக்கு, பாசக்கார அண்ணன் சொல்லும் அறிவுரை இந்த பாடல். ஆயிரக்கணக்கான திருமண வீடுகளில் ஒலித்த பாடல் இது. பாடலில் சொல்லப்பட்ட விஷயம் இன்றும் பேசப்படுகிறது.
1958ல் வெளியான "பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்ற படத்தில் இந்த பாடல் இடம் பெற்றது. டி.எஸ்.துரைராஜ், சாவித்ரி இந்த பாடலில் நடித்து இருந்தனர்.
4. சின்னகுட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா
அந்த காலத்தில் இடம் பெற்ற ஒரு குத்துபாடல் இது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை ரசித்து எழுத, ஜி.ராமநாதன் இசையமைத்து இருந்தார்.
ஆரவல்லி என்ற படத்தில் இடம் பெற்ற துள்ளல் இசை பாடல். தமிழகம் கடந்து இலங்கை, மலேசியாவிலும் பிரபலமாகி இருந்தது. அங்கே போய் அப்பா கச்சேரி செய்து இருக்கிறார். ஏ.கருணாநிதி டான்ஸ் இன்னும் அபாரமாக இருக்கும்
5. சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
ஆண்கள் பாடிய தாலாட்டுக்கு கொஞ்சம் மவுசு குறைவு. ஆனால், 'பங்காளிகள்' படத்தில் அப்பாவின் குரலில் வந்த இந்த தாலாட்டு பாடலுக்கு பவர் அதிகம். தட்சிணாமூர்த்தி இசையமைத்த இந்த படத்தில் ஜெமினி, அஞ்சலிதேவி நடித்தனர். இந்த பாடலுக்கு நடித்தவர் எம்.ஆர்.ராதா. மருதகாசி வரிகளை வடித்து இருந்தார்.
6. கூவாமல் கூவும் கோகிலம்
வைரமாலை படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரிகளில் அப்பா பாடிய மெலோடி பாடல். பெங்களூரு பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த பாடலில் நடித்தவர் மனோகர்.
7) அடிக்கிற கைதான் அணைக்கும்
கே.வி.மகாதேவன் இசையில் அன்னக்கிளி படத்தில் இடம் பெற்ற பாடல். மனோகர் பாட சரோஜா ஆடுவார். காலங்களை தாண்டி இன்றைக்கும் பல மேடைகளில் பாடப்படுகிறது. ஒரு குடிகாரனின் பாடலாக இது இருக்கும். அதற்கான ஏற்ற இறக்கங்களுடன் பாடி அப்பா அசத்தியிருப்பார். இடையிடையே வரும் ஒரு வித விக்கல் அவரின் டச்சிங்.
இந்த பாடல் பதிவின்போது அப்பா குரலை சுசீலா ரசிக்க, அனைவரும் சிரிக்க, அப்பாவின் வெத்தலை வெளியே சிதறி ரிக்கார்டிங் அமர்களம் ஆகி இருக்கிறது.
8. வெள்ளிப்பனி மலை மீதுலாவுவோம்

பட மூலாதாரம், YT/Thenisai
கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் பாரதியார் பாடல். படத்தில் பாடல் வரும் சூழல், பாரதியாராக நடித்த எஸ்.வி.சுப்பையா நடிப்பு, ஜி.ராமநாதன் இசை, அப்பாவின் கம்பீர குரல் என விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த பாடலை கேட்டால் மெய் சிலர்க்கும்.
இந்த படத்தில் இன்னும் 2 பாடல்களை அப்பா பாடியிருந்தார். சம்பளம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம், "பணம் வாங்கிக்கொண்டா இந்த பாடலை பாரதியார் எழுதியிருக்கிறார். நான் எப்படி வாங்க முடியும்?" என்பதுதான்.
9. ஆசையே அலை போல
தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் உருவான தத்துவ பாடல். ஒருமுறை உன்னிப்பாக கேளுங்கள் வாழ்க்கையில் தெளிவு பிறக்கும்.
ஆசையே அலை போலே..
நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே.....வாழ்நாளிலே !"
என்ற கண்ணதாசன் வரிகள் இன்னும் வலிமை சேர்க்கின்றன.
10. கண்களும் கவி பாடுதே
'அடுத்த வீட்டு பெண்' படத்தில் அப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய பாடல். இரண்டுபேரும் போட்டி போட்டு சங்கீதத்தை ரசித்து பாடியிருப்பார்கள்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























