தர்மேந்திர பிரதான்: வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடியவர் அதே காரணத்தால் ராஜிநாமா

    • எழுதியவர், சந்தீப் சாஹு
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒரு காலத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தானே போராட்டம் நடத்தி, காவல் துறையின் தடியடியால் காயமடைந்த தர்மேந்திர பிரதான், இன்று மற்றொரு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என்பதை முரண் என்றுதான் சொல்ல வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்திப் போராடிய மாணவ, மாணவிகள் காவல்துறையின் தடியடியால் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் வெளியான ஒரு செய்தி, தற்போது ஊடகங்களில் மீண்டும் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தியின்படி, 1997ஆம் ஆண்டு மறைந்த ஜே.பி. பட்நாயக் அரசாங்கத்தின் கீழ் ஒடிசாவில் நடந்த வினாத்தாள் கசிவுக்கு எதிராக, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) சார்பில் மாநில தலைமைச் செயலகத்தின் முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில், தர்மேந்திர பிரதான் காவல்துறையின் தடியடியால் காயமடைந்தார்.

பிரதான் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். இந்தச் சம்பவம் நடந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு, 20 ஜூலை 2026 அன்று பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியில், பல போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பிரசாந்த் ராவத், பிபிசியிடம் பேசும்போது இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

தற்போது புவனேஸ்வரில் உள்ள படியா பகுதியில் அமைந்துள்ள ராஜா மதுசூதன் தேவ் கல்லூரியின் தலைவர் பதவியில் பணியாற்றி வரும் ராவத் கூறுகையில், "அந்த நாட்களில் நான் ஏபிவிபி-யின் புவனேஸ்வர் கிளையின் தலைவராக இருந்தேன். தர்மேந்திர பிரதான் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். எனக்குத் தேதி சரியாக நினைவில் இல்லை. ஆனால், 1997 ஜூலை மூன்றாவது வாரத்தின் ஒரு நாளில் (அநேகமாக 17 அல்லது 18ஆம் தேதி) பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவுக்கு எதிராக, ஏபிவிபி-யின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தர்மேந்திர பிரதானின் தலைமையில் சட்டப்பேரவை முன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்" என்றார்.

"கடந்த 1988 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் வினாத்தாள் கசிவுகள் நடந்து கொண்டிருந்தன. எனவே, நாங்கள் அதை 'வினாத்தாள் கசிவின் தசாப்தம்' (Decade of Question Leak) என்று அழைப்பதுண்டு. போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக, அதிரடிப் படை வீரர்கள் எங்கள் மீது இரக்கமின்றித் தடியடி நடத்தினர், இதில் எங்களது 64 தொண்டர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் நானும் தர்மேந்திர பிரதானும் இருந்தோம்" என்றார்.

மாணவர் சங்கத் தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடித்த பிரதான்

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் நீண்ட அரசியல் பயணம் 80களின் காலகட்டத்தில் மாணவர் அரசியலில் இருந்துதான் தொடங்கியது. சிறு வயது முதலே அவர் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் இணைந்து செயல்பட்டார், மேலும் தால்செர் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஏபிவிபி சார்பாக உத்கல் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் எஸ்எஃப்ஐ வேட்பாளரும் தற்போதைய மூத்த பிஜு ஜனதா தள (பிஜேடி) தலைவருமான அருண் சாஹுவிடம் தோற்றுப்போனார்.

உண்மையில் அந்தத் தேர்தலில் தர்மேந்திரா மூன்றாவது இடத்தைப் பிடித்தார், சத்ர ஜனதாவின் வேட்பாளர் சிந்துஜோதி திரிபாதி இரண்டாவது இடத்தில் இருந்தார். இருப்பினும், மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்தது.

பிரதானின் மாணவர் பருவம் குறித்து பிபிசியிடம் பேசிய சிந்துஜோதி திரிபாதி, "தர்மேந்திரா மிகவும் சாதாரணமான ஒரு மாணவராக இருந்தார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தலைவர் பதவிக்காக ஏபிவிபி சார்பாக அவருடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, வளாகத்தில் மிகக் குறைவானவர்களுக்கே அவரைத் தெரிந்திருந்தது. ஆனால் அந்த நாட்களில் உத்கல் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி-யின் கட்டமைப்பு மிகவும் வலுவாக இருந்ததால், அவருக்கு நல்ல வாக்குகள் கிடைத்தன" என்று கூறுகிறார்.

இந்தத் தேர்தலில் பிரதானைத் தோற்கடித்த அருண் சாஹு, பின்னர் பிஜேடியின் ஒரு முக்கியத் தலைவராகவும், மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சராகவும் மாறினார். தற்செயலாக, 2019 ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்தின் பவள விழா கொண்டாட்டத்தின் போது, பிரதான் மற்றும் சாஹு ஆகிய இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

தனது முன்னாள் அரசியல் எதிரியான பிரதானின் ராஜினாமா கோரிக்கை குறித்துக் கேட்டபோது அருண் சாஹு, "எனது தலைவரும் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக், பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறிவிட்டார், என்னுடைய கருத்தும் அவரது கருத்திலிருந்து வேறுபட்டதல்ல" என்று பிபிசியிடம் கூறினார்.

பிரதானின் அரசியல் எழுச்சி குறித்து சாஹு கூறுகையில், "பாஜக-வில் அனைத்து முடிவுகளும் ஆர்எஸ்எஸ்ஸால் எடுக்கப்படுபவை என்பது உங்களுக்குத் தெரியும். ஒடிசாவில் பாஜகவிற்கு என்று எந்த ஒரு தனித்துவமான அடையாளமும் இல்லாத காலத்திலிருந்தே அவர் நீண்ட காலமாகச் ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைந்து செயல்பட்டவர் என்பதால், அவருக்குக் கட்சியிலும் பின்னர் அரசாங்கத்திலும் பெரிய பதவிகள் கிடைத்தது இயல்பான ஒன்றுதான்" என்றார்.

பிரதானுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகக் கூறும் சாஹு, ஆனால் இப்போதெல்லாம் அவருடன் பேசுவதோ அல்லது சந்திப்பதோ மிகவும் அரிதாகவே நடக்கிறது என்றும் கூறுகிறார்.

தர்மேந்திர பிரதானின் அரசியல் வாழ்க்கை

உத்கல் பல்கலைக்கழகத்தில் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தர்மேந்திராவின் அரசியல் எழுச்சி தொடர்ந்து நீடித்தது. தனது கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் அவர் பாஜகவின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பில் வெற்றி படிகளில் ஏறத் தொடங்கினார்.

பிரதான் கடந்த 1994ஆம் ஆண்டில் ஏபிவிபியின் தேசிய பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார், மேலும் 1997 வரை இந்தத் பதவியில் நீடித்தார். 2004 முதல் 2006 வரை அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவராக இருந்தார். பின்னர் அவர் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக உயர்ந்தார். இந்தப் பதவியில் இருந்துகொண்டு உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநிலப் பொறுப்பாளராகப் பணியாற்றி, கட்சியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.

தர்மேந்திர பிரதானின் தேர்தல் அரசியல் வாழ்க்கை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது, அப்போது அவர் பிஜேடி-பாஜக கூட்டணியின் வேட்பாளராகப் பாலலஹடா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2004இல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் தேவ்கர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தேவ்கர் நாடாளுமன்றத் தொகுதி என்ற ஒன்று இல்லை, அது சம்பல்பூர் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் அவர் 2024இல் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், இதற்கிடையே நீண்ட காலத்திற்கு அவர் நேரடித் தேர்தல்களில் போட்டியிடவில்லை.

இருப்பினும், கட்சியில் அவருக்கிருந்த முக்கியத்துவத்தின் காரணமாக அவர் இரண்டு முறை மற்ற மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றார். ஏப்ரல் 2012 முதல் ஏப்ரல் 2018 வரை பிகாரில் இருந்தும், பின்னர் ஏப்ரல் 2018 முதல் ஏப்ரல் 2024 வரை மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் நரேந்திர மோதியின் தலைமையில் மத்தியில் பாஜக அரசு அமைந்தபோது, பிரதானுக்குப் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பதவி வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் மாநிலங்களவையில் பிகாரைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருந்தார். முழுமையாக இரண்டு தசாப்தங்களுக்குப் (20 ஆண்டுகள்) பிறகு 2024இல் அவர் மீண்டும் ஒடிசாவில் தேர்தலில் போட்டியிட்டு, சம்பல்பூரிலிருந்து மக்களவை எம்பியானார்.

'தர்மேந்திர பிரதானின் வீட்டில் அமித் ஷா தங்கியிருந்தார்'

கட்சியிலும் அரசாங்கத்திலும் தர்மேந்திர பிரதான் வளர்ந்ததற்குப் பின்னால், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் அவருக்கிருந்த ஆழமான தனிப்பட்ட உறவு முக்கியப் பங்கு வகித்ததாகப் பிரதானின் சக வகுப்புத் தோழரான சிந்துஜோதி திரிபாதி நம்புகிறார்.

"என்னிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் நீதிமன்றம் ஷாவிற்கு ஊருக்குள் நுழையத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்த போது, அவர் சில நாட்கள் தர்மேந்திராவின் தால்செர் வீட்டில் தங்கியிருந்தார் என்று நம்பகமான பலர் மூலம் நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.

சிலர் பிரதானின் வெற்றிக்கு அவரது தனிப்பட்ட உறவுகளே காரணம் என்று கூறினாலும், மிக நீண்ட காலம் (24 ஆண்டுகள்) ஒடிசாவின் முதலமைச்சராக இருந்த பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்கிற்குப் பிரதானின் அரசியல் திறமை குறித்து ஆரம்பத்தில் இருந்தே தெரிந்திருந்தது என்பது மூத்த பத்திரிகையாளர் ரூபன் பானர்ஜியின் கூற்று.

கடந்த 2000ஆம் ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது, பாலலஹடாவில் தர்மேந்திரா முன்னிலையில் இருக்கிறார் என்ற செய்தி வந்ததும், அவர் (நவீன் பட்நாயக்), "இது எனக்குப் பிரச்னை" என்று கூறினார், என நவீன் பட்நாயக் பற்றிய தனது புத்தகத்தில் ரூபன் பானர்ஜி எழுதியுள்ளார்.

நவீன் இந்த வார்த்தையைக் கூறும்போது தானும் அந்த காரில் இருந்ததாக பானர்ஜி கூறுகிறார். இருப்பினும், நவீன் அந்த நேரத்தில் ஒடிசாவிற்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் புதியவராக இருந்தார் என்பதால் பலர் இந்த கதையை நம்பத் தயாராக இல்லை. ஆனால் பிபிசியுடன் தொலைபேசியில் பேசும்போது, இந்த விஷயம் 'நூறு சதவீதம் உண்மை என்று பானர்ஜி மீண்டும் வலியுறுத்தினார்.

ஒடிசாவில் பாஜகவின் கட்டமைப்பை விரிவுபடுத்தினார்

ஒடிசாவில் பாஜக கட்டமைப்பை விரிவுபடுத்தியதற்கான முக்கிய பெருமையையும் பிரதானுக்கே வழங்குகிறார் பானர்ஜி. 2014இல் மத்தியில் அமைச்சரான பிறகு, பிரதான் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை ஒடிசாவில் கழிப்பார் என்று அவர் கூறுகிறார்.

இந்தக் காலகட்டத்தில் அவர் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து உள்ளூர் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். பலர் இதனை நகைச்சுவையாக 'வீகெண்ட் பார்ட்டி' என்று அழைப்பதுண்டு.

கடந்த 2014 முதல் 2019 வரை பிரதானின் சிறப்புப் பணி அதிகாரி மற்றும் தனிச் செயலாளராக இருந்த சம்பித் திரிபாதியும், மாநிலத்தில் கட்சியின் விரிவாக்கத்தில் பிரதானுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறார்.

"ஒட்டுமொத்த மாநிலத்திலும் அடிமட்ட அளவில் பணிபுரியும் பாஜக தொண்டர்களை அவர் தனிப்பட்ட முறையில், அவர்களின் பெயர்களுடன் அறிந்து வைத்துள்ளார். மத்தியில் தனக்கிருக்கும் பதவியைப் பயன்படுத்தி உள்ளூர் பிரச்னைகளைத் தீர்ப்பதில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறார்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு