You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிஜேபி போராட்டம், தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?
காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில், தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஜந்தர் மந்தரில் மேடையில் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, "நாம் சாதித்துக் காட்டிவிட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்துவிட்டார்" என்றார்.
மேலும், "தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா நடந்துவிட்டது, நீங்கள் அச்சமின்றி அரசின் முன் பணியாமல் இருந்தால், எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் அவர்களை ராஜிநாமா செய்ய வைக்க நம்மால் முடியும் என்பதற்கு இதுவே சாட்சி" என்று அவர் கூறினார்.
அபிஜித் தீப்கே என்ன கூறினார்?
ஜந்தர் மந்தர் மேடையில் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, "இது ஜனநாயகம் என்பதால் பயப்படத் தேவையில்லை. ஜனநாயகத்தில் பேசுவதற்கே பயம் ஏற்பட்டால் அது என்ன ஜனநாயகம்? நாம் குரல் எழுப்பினால் இவர்கள் வழிக்கு வருவார்கள், இவர்களை வழிக்குக் கொண்டு வந்து வைத்திருப்பது அவசியம். தங்களை அரசர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நம்மால்தான் அங்கு அமர்ந்திருக்கிறார்கள்" என்றார்.
சிஜேபி-யின் முதன்மையான கோரிக்கையான தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா நடந்துவிட்டது. ஆனால் தங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் இருப்பதாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார். இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேறும் வரை தாங்கள் ஜந்தர் மந்தரில் இருந்து நகரப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
"ராஜிநாமா நடந்துவிட்டது, ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் கரப்பான் பூச்சிகள், அப்படியே சென்றுவிட மாட்டோம்; ஒருமுறை கரப்பான் பூச்சி உள்ளே நுழைந்தால் வெளியேறாது. தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்டார், ஆனால் நீட் வினாத்தாள் கசிவு காரணமாக எந்தக் குழந்தைகளின் குடும்பங்கள் தற்கொலையால் தங்கள் பிள்ளைகளை இழந்தனவோ, அந்த குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்றார்.
"ஜூலை 20 அன்று அநாகரிகமாக நடந்துகொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டிசிபி சந்தீப் லம்பா, ஏசிபி அஜய் சர்மா, சச்சின் சர்மா ஆகியோர் அமித் ஷா மற்றும் மோதியின் பெயரால் தடியடி நடத்தியுள்ளனர். இப்போது ஒரு பதவி விலகல் மட்டுமே நடந்துள்ளது, நினைவில் கொள்ளுங்கள் கரப்பானிடம் வம்பு வைத்துக்கொள்ளக் கூடாது. ஜூலை 20க்கு பிறகு மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். இதுதான் ஜனநாயகம்" என்று தங்கள் மூன்றாவது கோரிக்கை குறித்து அவர் கூறினார்.
"இது நாட்டின் சாமானிய மனிதரின் வெற்றி. இந்த நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, கேள்வி கேட்பதைக் குற்றமாகக் கருதியவர்களிடம் இருந்து நமது நாட்டை நாம் திரும்பப் பெற்றுள்ளோம். இது ஓர் ஆரம்பம் மட்டுமே, நமது நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறையையும் மாற்றுவோம்" என்று சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறினார்.
"நாடு தழுவிய அளவில் அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப் போவதாக நாங்கள் அறிவித்துள்ளோம், மாலை 6 மணிக்கு நாடு முழுவதும் அனைவரும் மெழுகுவர்த்தி பேரணி நடத்துங்கள்," என்று கூறினார்.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்படும் என சிஜேபி அறிவித்திருந்தது.
சோனம் வாங்சுக் என்ன கூறினார்?
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஜனநாயகத்தின் வெற்றி என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
"இது ஜனநாயகத்தின் வெற்றி, நேரடியாக வீதிகளில் இருந்து கிடைத்த வெற்றி. இது அமைதி, பொறுமை மற்றும் விடாமுயற்சியின் வெற்றி. காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் நாட்டின் 'ஜென் ஸி' தலைமுறைக்கு வாழ்த்துகள்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
"அதே போல, அச்சத்தைத் துறந்து நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் குரல் எழுப்பிய அனைத்து குடிமக்களுக்கும் நன்றிகள்," என்றும் அவர் தனது பதிவில் எழுதியுள்ளார்.
அதோடு இறுதியில், "பொறுப்புக்கூறலில் இருந்து இப்போது சீர்திருத்தத்தை நோக்கிச் செல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ஜூன் 28 அன்று ஜந்தர் மந்தரில் சிஜேபி மேடையில் அவர் இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரது உண்ணாநோன்பை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அவர் தொடர்ந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி வந்தார்.
தலைவர்கள் கூறுவது என்ன?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "தர்மேந்திர பிரதான் பதவி விலகியது நமது கல்வி முறையை மீண்டும் சீரமைக்கும் திசையிலான ஒரு மிகப்பெரிய படியாகும். நாடு முழுவதும் உள்ள மாணவர்களே, மிகச் சிறப்பு, உங்கள் அனைவரையும் எண்ணிப் பெருமைப்படுகிறேன். வீதிகளுக்கு வந்து ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் உறுதியுடன் நின்ற இளைஞர்கள், மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும்"இன்னும் இரண்டு கோரிக்கைகள் பாக்கியுள்ளன - மாணவர்கள் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மதிப்பளித்து பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும், மாணவர்கள் மீது வன்முறையை ஏவிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சமூகத்தின் மற்ற பிரிவினரான விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இந்த அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் கண்ணியத்திற்காகவும் அரசியலமைப்பு வழியில் உறுதியுடன் நிற்பதில்தான் உண்மையான தைரியம் உள்ளது. இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது, பயப்படாதீர்கள்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது கோடிக்கணக்கான இளைஞர்களின் வெற்றி என்று தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
"இந்திய 'மாணவர்களின் முழக்கம்' இறுதியாக அகங்காரமிக்க அதிகாரத்தின் வாசலைச் சென்றடைந்துள்ளது. நாடு முழுவதும் கல்வி முறையைச் சீரமைப்பதற்காக வீதிகளில் இறங்கி குரல் எழுப்பிய நமது கோடிக்கணக்கான இளைஞர்களின் வெற்றி இது. இது உண்மையின் வெற்றி மற்றும் மோதியின் பிடிவாதத்திற்குக் கிடைத்த தோல்வி. தங்கள் ரத்தம், தங்களின் குழந்தைகளை இழந்த அனைத்து குடும்பங்களின் வெற்றி இது, ஏனெனில் இந்த அரசாங்கம் ஊழல் நிறைந்தது. மாணவர்களின் நலனுக்காக நாடாளுமன்றம் முதல் வீதி வரை குரல் எழுப்பிய ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு வெற்றி இது" என அவர் எழுதியுள்ளார்.
"இப்போது, மோதிஜி நம் இளைய தலைமுறையினரிடம் மன்னிப்பு கேட்பதற்கும், அவர்கள் மீது தடி, லத்திகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குமான நேரம் வந்துவிட்டது," எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
"நமது நாட்டின் இளைஞர்களும் மாணவர்களும் மீண்டும் தங்களது நாட்டைத் தங்களின் கைகளில் எடுக்கத் தொடங்கும் நாள் இது. நீங்கள் வன்முறையற்ற முறையில் தைரியத்துடன் எழுந்து நிற்கும்போது, உங்களுக்கு முன் யார் இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்" என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், இது புதிய தலைமுறையின் வெற்றி என்றும், ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
"தர்மேந்திர பிரதான் பதவியை விட்டு விலகவில்லை, மாறாக நாட்டின் குழந்தைகளும் மாணவர்களும்தான் அவரது ராஜிநாமாவை வாங்கியுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு நடந்தபோதோ அல்லது 22 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட போதோ மோதிஜி ஒரு பொறுப்புள்ள பிரதமராக இருந்து அவரது ராஜிநாமாவை வாங்கியிருந்தால், அதை மோதிஜியால் வாங்கப்பட்ட ராஜிநாமா என்று கூறியிருக்கலாம்" என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
அத்துடன், "ஊழல் நிறைந்த கல்வி அமைச்சரை அவரது பதவியில் இருந்து நீக்குமாறு, அகங்காரமிக்க பிரதமரை 'ஜென் ஸி' தலைமுறை கட்டாயப்படுத்தியுள்ளது" என்று எழுதியுள்ளார்.
"தாமதமாக வந்தாலும் சரியாக வந்துள்ளது, இதை முன்பே செய்திருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது, தேர்வுகள் மீது இளைய தலைமுறையினர் வைத்திருந்த நம்பிக்கை, அற்றுப்போய்விட்டது. இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும் மாற்றப்பட்டு புதிய கட்டமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்" என ஹரியாணாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா கூறியுள்ளார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு