You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை முடிவில் காக்ரோச் ஜனதா கட்சியிடம் ஜே.பி.நட்டா கூறியது என்ன?
காக்ரோச் ஜனதா கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க மத்திய அரசு நாளை வரை அவகாசம் கோரியுள்ளது. டெல்லியில் அரசியலமைப்பு மன்றத்தில் (Constitution club) அந்தக் கட்சியின் தலைவர்களுக்கும் மத்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் இதைத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் அரசுத் தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் அதன் செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா கலந்துகொண்டனர்.
சுமார் இரண்டு மணிநேரம் நடந்த சந்திப்பின்போது, காக்ரோச் ஜனதா கட்சி தனது முக்கியக் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தது.
குறிப்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவராகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது அதன் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று.
இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாட்டின் கருத்தாக இருப்பதாக" கூறினார்.
மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை மூலம் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, "போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கவே நாங்கள் இங்கு வந்திருந்தோம். அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம். சுமூகமான சூழலில் பேச்சுவார்த்தை நடந்தது" என்று தெரிவித்தார்.
அதோடு, "மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். நாளை மதியம் மீண்டும் அவர்களைச் சந்தித்து அவை குறித்துப் பேசுவதாகத் தெரிவித்துள்ளோம்," என்று குறிப்பிட்டார்.
அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "நேற்றிரவு முதல் இன்று வரையிலும்கூட, டெல்லி காவல்துறை எந்தக் காரணமும் இன்றி இளைஞர்களைத் தடுத்து வைத்துள்ளதையும் சுட்டிக் காட்டியதாக" தெரிவித்தார்.
மேலும் பேசிய சௌரவ் தாஸ், "போலீசார் வழக்கறிஞர்களையும் மோசமாக நடத்துகின்றனர். இது நடக்கக்கூடாது என்று அரசிடம் கூறினோம். ஏனெனில், இது காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் கூறியபோதிலும், அப்படி ஏதேனும் நடந்தால் அவ்வாறு செய்ய வேண்டாமென டெல்லி காவல்துறையிடம் கேட்டுக் கொள்வதாக எங்களிடம் தெரிவித்தார்கள்," என்று விளக்கினார்.
'தர்மேந்திர பிரதான் பதவி விலகல் முடிவில் சமரசமே இல்லை'
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது காக்ரோச் ஜனதா கட்சியின் ஒரு மாத காலப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, ஜூலை 20ஆம் தேதி அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என காக்ரோச் ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.
அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், இதில் எந்த சமரசமும் இல்லை. அதுபோக, வினாத்தாள் கசிவின் விளைவாக உயிரை இழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போராட்டங்களின்போது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைதுள்ளோம்," என்று தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் இளம் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர். இதுவரை, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசின் கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் அவர்களைச் சமாதானப்படுத்தியதாகத் தெரியவில்லை.
வியாழக் கிழமையன்று (ஜூலை 23), பிரதமர் நரேந்திர மோதி "நாட்டின் இளைஞர்களுடைய நலனும் அவர்களின் எதிர்காலமும்தான் எங்கள் முதன்மையான முன்னுரிமை" என்று கூறினார்.
தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்ட குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரின் வாக்குறுதிக்குப் பதிலளிக்கும் விதமாக, காக்ரோச் ஜனதா கட்சி செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேசியபோது, "இத்தகைய பேச்சுகளாலோ, அறிவிப்புகளாலோ எந்தப் பயனும் இல்லை. இவை அனைத்தும் வெறும் ஏமாற்று வேலைகள். பொதுமக்கள் இந்த ஏமாற்று வேலைக்கு இரையாகக் கூடாது. அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதைவிடக் குறைவான எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம்," என்று தெரிவித்தார்.
பிரதமர் மோதி இந்த விவகாரம் குறித்து என்ன பேசினார்?
காக்ரோச் ஜனதா கட்சி ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தரில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டு போராட்டத்தைத் தொடங்கியது.
இந்த விவகாரத்தில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி சமூக ஊடகம் வாயிலாக ஒரு காணொளி அறிக்கையை வெளியிட்டார். வினாத்தாள் கசிவு சம்பவத்திற்குப் பிறகு தனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அதில் அவர் விளக்கினார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
மேலும், "வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயமல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது. எனவே, இச்சம்பவத்திற்குப் பிறகு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை இழக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன், "மிகக் குறுகிய காலத்திற்குள் 22 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்தது. பின்னர் ஜூன் 19 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன; தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பற்றிய தகவல்களை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம்" என்று கூறினார்.
மீண்டும் விரைவாகத் தேர்வை நடத்துவது மட்டும் அரசுக்குப் போதுமானதாக இருக்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், "நாங்கள் அதில் மட்டும் திருப்தி அடைந்துவிடவில்லை. விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வரைவுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளை நான் கேட்டுக் கொண்டேன். அவர்கள் கடினமாக உழைத்து அந்த வரைவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளனர்," என்று தெரிவித்தார்.
திங்கள் கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, "அந்த மசோதாவை விரைவாக நிறைவேற்ற அரசு முயலும், அதன் மூலம் வினாத்தாள் கசிவுக்குக் காரணமானோர் விரைவாக, கடுமையாக தண்டிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்றும் கூறினார்.
'மன்னிப்பு கேளுங்கள்' - ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட காணொளியை மறுபகிர்வு செய்து, அவர் மாணவர்களை அவமதிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மோதி அவர்களே, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோருகின்றனர். நள்ளிரவில் வெளியிடப்பட்ட இந்தப் பயனற்ற காணொளியின் மூலம் அவர்களுடைய புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள்," என்று குறிப்பிட்டார்.
அதோடு, "தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குங்கள், மாணவர்களைத் தாக்கியவர்களைத் தண்டித்து நடவடிக்கை எடுங்கள், மன்னிப்பு கேளுங்கள்," என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு