குறைமாத குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்னை இருக்குமா? 10 கேள்வி - பதில்கள்

    • எழுதியவர், மருத்துவர் ஹிமானி, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரும் ஒரு இனிமையான தருணம்.

பொதுவாக, கர்ப்ப காலம் 37 முதல் 40 வாரங்களில் நிறைவடையும். ஆனால், ஒரு குழந்தை 37 வாரங்களுக்கு முன்பே பிறந்தால், அதை 'குறைமாதப் பிரசவம்' அல்லது 'முன்கூட்டிய பிறப்பு' என்று அழைக்கிறோம்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீடுகளின்படி, உலகெங்கிலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.3 கோடி (13 மில்லியன்) குழந்தைகள் குறிப்பிட்ட கர்ப்ப காலத்திற்கு முன்பே பிறக்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் குறைமாதப் பிறப்பும் ஒன்றாகும்.

இருப்பினும், நவீன குழந்தை மருத்துவத்தின் (neonatal medicine) உதவியால், இதுபோன்று பிறக்கும் பல குழந்தைகள் இப்போது ஆரோக்கியமாக வளர்கிறார்கள்.

கர்ப்ப காலத்தைப் பொறுத்து, குறைமாதப் பிரசவத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:

  • மிக அதீத குறைமாதம் : 28 வாரங்களுக்கு குறைவாக
  • அதீத குறைமாதம் : 28–32 வாரங்கள்
  • மிதமான குறைமாதம் : 32–34 வாரங்கள்
  • தாமதமான குறைமாதம் : 34–36 வாரங்கள்

கர்ப்ப காலம் எவ்வளவு குறைகிறதோ, அந்த அளவுக்குக் குழந்தைக்கு கூடுதல் மருத்துவக் கவனிப்பு தேவைப்படலாம்.

குறைமாதப் பிறப்புக்கான காரணங்கள் என்ன?

சில சந்தர்ப்பங்களில் தெளிவான காரணங்கள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும், சில குறிப்பிட்ட நிலைமைகள் இந்த அபாயத்தை அதிகரிக்கின்றன.

  • கருப்பை அல்லது கருப்பை வாய் தொடர்பான பிரச்னைகள் (உதாரணமாக, கருப்பை வாய் வலுவிழப்பு மற்றும் கட்டமைப்பு குறைபாடுகள்).
  • பனிக்குடம் முன்கூட்டியே உடைதல் (PPROM): பிரசவ வலி தொடங்குவதற்கு முன்பே பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறுதல்.
  • சிறுநீர் பாதை, பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை நோய்த்தொற்றுகள்.
  • தாய்க்கு உயர் ரத்த அழுத்தம், ப்ரீ-எக்லாம்ப்சியா, நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னை மற்றும் ரத்தசோகை போன்ற பிரச்னைகள் இருப்பது.
  • வயிற்றில் இரண்டு அல்லது மூன்று கருக்கள் இருப்பது.
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு போன்ற வாழ்க்கை முறை காரணிகள்.

பிற காரணங்கள்: இதற்கு முன்பு குறைமாதப் பிரசவம் ஏற்பட்டிருந்தால், தாயின் வயது 18-க்கும் குறைவாக அல்லது 35-க்கும் அதிகமாக இருப்பது, அடுத்தடுத்த கர்ப்பங்களுக்கு இடையிலான இடைவெளி மிகக் குறைவாக இருப்பது, கடுமையான உளவியல் மன அழுத்தம்.

குறைமாதப் பிரசவத்தை கண்டறிவது எப்படி?

ஒரு கர்ப்பிணிக்கு சீரான இடைவெளியில் ஏற்படும் வயிற்று வலி, கீழ் முதுகு வலி, அடிவயிற்றில் அழுத்தம், பிறப்புறுப்பில் திரவக் கசிவு, ரத்தப்போக்கு மற்றும் குழந்தையின் அசைவு குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இதுபோன்ற அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானது.

குறைமாதக் குழந்தைகளுக்கு வர வாய்ப்புள்ள பிரச்னைகள் என்ன?

குறிப்பிட்ட கர்ப்ப காலத்திற்கு மிகவும் முன்கூட்டியே குழந்தை பிறந்தால், அதன் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சுவாசப் பிரச்னைகள்: நுரையீரல்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். சுவாசக் கோளாறு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் சர்ஃபாக்டன்ட் (Surfactant) சிகிச்சை அளிக்கப்படலாம். வென்டிலேட்டர் அல்லது சிபிஏபி (CPAP) தேவைப்படலாம்.

மஞ்சள் காமாலை: குறைமாதக் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவது பொதுவானது. பெரும்பாலும், ஒளிக்கதிர் சிகிச்சை (phototherapy) மூலம் இதைக் குறைக்கலாம்.

குறைந்த ரத்த சர்க்கரை அளவு : குழந்தை பிறந்த முதல் சில நாட்களில் குளுக்கோஸ் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

உடல் வெப்பநிலை: உடலில் கொழுப்புச் சத்து குறைவாக இருந்தால் உடல் வெப்பநிலை குறையலாம், இதனால் குழந்தையை இன்குபேட்டரில் வைக்க வேண்டியிருக்கும்.

தாய்ப்பால் குடிப்பதில் உள்ள பிரச்னை: பால் உறிஞ்சுதல், விழுங்குதல் மற்றும் சுவாசித்தல் ஆகிய மூன்று செயல்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதுபோன்ற குழந்தைகளுக்கு இந்த திறன் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது.

நோய்த்தொற்றுகள்: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நோய்த்தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மூளை வளர்ச்சி: சில குழந்தைகளுக்கு மூளையில் ரத்தக்கசிவு மற்றும் வளர்ச்சி தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இருப்பினும், முறையான தொடர் கண்காணிப்பு மூலம், இவற்றை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

கண் பிரச்னைகள்: குறைமாதக் குழந்தைகளுக்கு 'ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி' (ROP) என்ற கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே கண் பரிசோதனைகள் அவசியம்.

செவித்திறன் பிரச்னைகள்: சில குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

குறைமாத குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பிரச்னை இருக்கும் என்பது உண்மையா?

நிச்சயமாக இல்லை. இது சமூகத்தில் உள்ள மிகப்பெரிய தவறான கருத்துகளில் ஒன்றாகும்.

34-36 வாரங்களில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு முழுமையான ஆரோக்கியத்தோடு வளர்கின்றனர்.

28-32 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் கூட நவீன என்ஐசியூ (NICU) சிகிச்சை, சரியான ஊட்டச்சத்து மற்றும் முறையான தொடர் கண்காணிப்பு மூலம் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

எனவே "முன்கூட்டியே பிறந்ததால் எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படும்" என்று நினைப்பது தவறானது.

குறைமாதக் குழந்தைக்கு என்ஐசியூ சிகிச்சை ஏன் தேவை?

"குழந்தை ஏன் என்ஐசியூ-வில் இருக்கிறது?" என்று பல பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்.

ஆனால், என்ஐசியூ (நியோனேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட்) என்றால் குழந்தையின் நிலை மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. இது குழந்தைக்குத் தேவையான சிறப்பு மருத்துவக் கவனிப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரிவாகும்.

தேவைக்கேற்ப என்ஐசியூ-வில் வழங்கப்படும் சேவைகள்:

  • சுவாசிப்பதற்கான சிபிஏபி அல்லது வென்டிலேட்டர் உதவி
  • இன்குபேட்டர் மூலம் உடல் வெப்பநிலையை பராமரித்தல்
  • நரம்பு மூலம் திரவங்கள் மற்றும் மருந்துகள் செலுத்துதல்
  • டியூப் மூலம் அல்லது ஒரு சிறப்பு முறையில் தாய்ப்பால் கொடுத்தல்
  • இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்தல்
  • நோய்த்தொற்றுகளைத் தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல்

என்ஐசியூ-வில் செலவிடும் நாட்களின் எண்ணிக்கை, கர்ப்ப காலம், குழந்தையின் எடை மற்றும் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடும்.

முன்கூட்டிய பிறப்பால் நீண்ட காலப் பிரச்னைகள் ஏற்படுமா?

பெரும்பாலான குறைமாதக் குழந்தைகள் முற்றிலும் இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருப்பினும், மிகக் குறைவான கர்ப்ப காலத்தில் பிறக்கும் சில குழந்தைகளுக்கு சில குறிப்பிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

  • வளர்ச்சி தாமதம்
  • பேசுவதில் தாமதம்
  • கற்கும் திறனில் சில தாமதங்கள்
  • பார்வை அல்லது செவித்திறன் பிரச்னைகள்
  • அரிதாக செரிப்ரல் பால்சி (மூளை முடக்குவாதம்) ஏற்படுவது.

இருப்பினும், இவை எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றை முறையான தொடர் கண்காணிப்பு மூலம் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

கங்காரு தாய் பராமரிப்பு (கேஎம்சி) என்பது என்ன?

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு முறையாகும். குழந்தையை தாய் அல்லது தந்தையின் நெஞ்சோடு (தோலோடு தோல் படும்படி) அணைத்து வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள்:

  • உடல் வெப்பநிலை சீராக இருக்கும்.
  • தாய்ப்பால் குடிப்பது மேம்படும்.
  • நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறையும்.
  • எடை விரைவாக அதிகரிக்கும்.
  • தாய்-சேய் பிணைப்பு வலுவடையும்.
  • உலக சுகாதார அமைப்பும் இந்த கேஎம்சி முறையைப் பரிந்துரைக்கிறது.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் என்ன?

  • குறைமாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது ஒரு மருந்து போன்றது.
  • நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
  • குடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • என்இசி (நெக்ரோடைசிங் என்டரோகோலிடிஸ்) எனப்படும் தீவிர குடல் அழற்சி நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • குழந்தையால் நேரடியாகப் பால் குடிக்க முடியாவிட்டாலும், தாய்ப்பாலை எடுத்து வேறு வழிகளில் (டியூப் மூலம்) கொடுக்கலாம்.

பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

  • மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனை தேதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  • தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட வேண்டும்.
  • குழந்தையின் எடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • தேவைப்பட்டால் கண் பரிசோதனைகள் மற்றும் செவித்திறன் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • உடல்நிலை சரியில்லாதவர்களை குழந்தையிடம் இருந்து தள்ளி வைக்க வேண்டும்.
  • சுத்தமான கைகளால் மட்டுமே குழந்தையைத் தொட வேண்டும்.

குறைமாதப் பிரசவம் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும் என்ன?

கட்டுக் கதை: குறைமாதக் குழந்தைகள் இயல்பாக வளர மாட்டார்கள்.

உண்மை: நவீன மருத்துவத்தின் உதவியால், பல குழந்தைகள் முற்றிலும் இயல்பான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

கட்டுக் கதை: குழந்தை என்ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டால், நம்பிக்கையை இழந்துவிட வேண்டும்.

உண்மை: என்ஐசியூ என்பது சிறப்புப் பராமரிப்புக்காக மட்டுமே. பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாக வீடு திரும்புகிறார்கள்.

கட்டுக் கதை: குறைமாதக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

உண்மை: தாய்ப்பாலே குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகும்.

கட்டுக் கதை: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை எப்போதும் பலவீனமாகவே இருக்கும்.

உண்மை: சரியான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் கண்காணிப்பு மூலம், பெரும்பாலான குழந்தைகள் இயல்பான எடையை எட்டுவார்கள்.

முன்கூட்டிய பிறப்பைத் தடுக்க முடியுமா?

எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்கூட்டிய பிறப்பைத் தடுக்க முடியாது, ஆனால் அதன் அபாயத்தைக் குறைக்க முடியும்.

  • கர்ப்பம் தரித்த உடனேயே மருத்துவக் கண்காணிப்பைத் தொடங்க வேண்டும்.
  • கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய அனைத்துப் பரிசோதனைகளையும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்.
  • ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
  • நோய்த்தொற்றுகள் இருந்தால் உடனடியாகச் சிகிச்சை பெற வேண்டும்.
  • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • சரிவிகித சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்.
  • ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்தபடி எடுக்க வேண்டும்.
  • கடந்த காலத்தில் குறைமாதப் பிரசவம் ஏற்பட்டிருந்தால், அடுத்தடுத்த கர்ப்பங்களில் சிறப்பு கண்காணிப்பு அவசியம்.

மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும்?

கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்:

  • பிறப்புறுப்பில் திரவக் கசிவு
  • ரத்தப்போக்கு
  • அடிக்கடி ஏற்படும் கர்ப்பப்பை சுருக்கங்கள் (அடிவயிற்று வலி)
  • குழந்தையின் அசைவுகள் குறைதல்
  • அதிக காய்ச்சல்
  • கடுமையான வயிற்று வலி
  • கடுமையான தலைவலி, பார்வை மங்குதல்

குறைமாதப் பிரசவம் என்பது பெற்றோருக்குக் கவலையளிக்கும் ஒரு சூழ்நிலைதான் என்றாலும், இன்றைய நவீன மகப்பேறு மருத்துவம், பச்சிளங்குழந்தை பராமரிப்பு முறைகள், என்ஐசியூ வசதிகள், தாய்ப்பாலின் முக்கியத்துவம், கங்காரு தாய் பராமரிப்பு மற்றும் முறையான தொடர் மருத்துவக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் பல குறைமாதக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை என இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் முறையான மருத்துவக் கண்காணிப்பு, எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் இருப்பது மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது ஆகியவை தாயும் சேயும் நலமாக இருக்க உதவும்.

(குறிப்பு: கட்டுரையாசிரியர் ஒரு மருத்துவர். இந்தக் கட்டுரையின் நோக்கம் மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதாகும். உடல்நலம் தொடர்பான எந்த முடிவும் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்பட வேண்டும்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு