நவ பாஷாண சிலை முதல் நில மோசடி வரை: பழனி மற்றும் முருகனை சுற்றி நடந்த சர்ச்சைகள்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பழனியில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ததாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வரும் நிலையில், 'பழனி கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்வதறகு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக', தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

நில விவகாரத்தில் பழனிக்கே த.வெ.க அரசு மொட்டை போட்டுவிட்டதாக, தி.மு.க விமர்சித்துள்ள நிலையில், 'காலப்போக்கில் உண்மைகள் வெளிவரும்' என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. பழனி கோயிலின் வரலாறு என்ன?

பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் காவடி எடுத்தும் பழனிக்கு வருவது வழக்கமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

'பொதினி' பழனி ஆன கதை

சங்க காலத்தில் பொதினி என இவ்வூர் அழைக்கப்பட்டதாகவும் பொதினி என்பது மருவி பழனி என ஆனதாக இந்து சமய அறநிலையத்துறை கூறுகிறது. இப்பகுதி வையாவி நாடு என்றும் ஆவிநாடு என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'திருமுருகாற்றுப்படையில் முருகனை வியந்து நக்கீரர் குறிப்பிடும் ஆவினக்குடி என்பது தற்காலப் பழனி நகரம்' எனக் கோயிலின் தல வரலாறு குறிப்பிடுகிறது. சித்தர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் போகரால் உருவாக்கப்பட்ட கோயிலாக பழனியாண்டவர் மலைக் கோயில் உள்ளதாக, தல வரலாறு கூறுகிறது.

மலையில் உள்ள கோவிலை போகர் நிர்மாணித்ததாகக் கூறுவது செவி வழிச் செய்தியாக மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் சொ.சாந்தலிங்கம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பொதினி என்ற பெயர் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வார்த்தை மருவி பழனி என மாறியுள்ளது. இதற்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை" என்கிறார்.

திருவிளையாடல் புராணக் கதையில், 'பழம் நீ' என முருகனைக் குறிப்பிட்டதால் பழனி என வந்திருக்கலாம் எனக் குறிப்பிடும் சொ.சாந்தலிங்கம், "ஆனால், கல்வெட்டுகளில் கடவுளின் பெயர் சுப்ரமணிய சுவாமி என்று உள்ளது." எனக் கூறுகிறார்.

வையாவி கோமான் எனப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவராகக் கருதப்படும் பேகன் வாழ்ந்த ஊர் இது என்றும் வையாவி நாட்டின் தலைநகராக பொதினி விளங்கியதாக, கோயிலின் தல வரலாறு குறிப்பிடுகிறது.

"சங்க காலப் பாண்டிய மன்னர்கள் பழனிக்கு வந்ததாக பெரிதாக எந்தக் குறிப்புகளும் இல்லை. திருஆவினன்குடி எனக் கூறும் கோயில் பிற்காலத்தில் மலையின்மீது கற்களால் கட்டப்பட்டிருக்கவே வாய்ப்புகள் உள்ளன," என்கிறார், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் சொ.சாந்தலிங்கம்.

விஜயநகரப் பேரரசின் அரசர்களாக இருந்த மல்லிகார்ஜூன ராயர் மற்றும் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கு மல்லிகார்ஜூன ராயர் காலத்தில் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

"பழனி கோயிலில் சுமார் நான்கு கல்வெட்டுகள் மட்டுமே உள்ளன. அதில், ஒன்றாக சுந்தரபாண்டியன் கல்வெட்டு உள்ளது. மற்றவை விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுகளாக உள்ளன," என்கிறார், சொ.சாந்தலிங்கம்.

'உப்பு, ஊறுகாய், நீராகாரம்'

"கல்வெட்டுகள் தவிர சில செப்புப் பட்டயங்களும் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உப்பு, ஊறுகாய், நீராகாரம் கொடுக்க வேண்டும் என்று பட்டயங்களில் உள்ளது," என்கிறார் அவர்.

கொங்கு நாட்டில் இருந்து பாண்டிய நாட்டுக்கு வரக் கூடிய வழித்தடமாக பழனி இருந்துள்ளதாகக் கூறும் சொ.சாந்தலிங்கம், "பொருந்தல் ஆற்றங்கரையில் ராஜாபுரம் என்ற ஊர் உள்ளது. இங்கு வணிகர்கள் வந்ததற்கான தடயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன." எனக் கூறுகிறார்.

"பழனி கோயில் தொடர்பாக தொல்லியல் துறையால் தனியாக எந்தப் புத்தகங்களும் வெளியிடப்படவில்லை. பழனி செப்பேடுகள் குறித்து புலவர் செ.ராசு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்," எனவும் அவர் தெரிவித்தார்.

கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் காணிக்கைகளை வழங்குகின்றனர். கடந்த மாதம் காணிக்கை தொகை எண்ணப்பட்டுள்ளது. அப்போது 2.89 கோடி ரூபாய் பணமும் 470 கிராம் தங்கமும் வந்துள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆலய வழிபாட்டைத் தவிர, பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் தரப்பில் கல்வி நிறுவனங்கள் பல நடத்தப்படுகின்றன. அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தவில் மற்றும் நாதஸ்வரம் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, வேத ஆகம பாடசாலை, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இவைதவிர, கருணை இல்லங்களையும் பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது.

'நவபாஷாண சிலை' சர்ச்சை

பழனி மலையில் நவபாஷாண தண்டாயுதபாணி சிலையை மறைத்து மூன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன மூலவர் சிலை 2004-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.

இதில், நவபாஷாண தண்டாயுதபாணி சிலையை போகர் அமைத்ததாக பக்தர்கள் மத்தியில் நம்பப்பட்டு வருகிறது.

"போகர் அமைத்தார் என்பது புராணக் கதையாக பார்க்கப்படுகிறது. நவ பாஷாணம் என ஒன்பது வகையான மருந்துகளால் தயார் செய்யப்படுவதாக சித்த வைத்தியர்கள் கூறுகின்றனர்," என்கிறார், சொ.சாந்தலிங்கம்.

"பாஷாணம் என்றால் கல் என்ற அர்த்தமும் உள்ளது. நவம் என்றால் புதிது என்ற பொருளும் வருகிறது. புதிய கல்லால் செய்த சிலை எனவும் எடுத்துக் கொள்ளலாம்," என அவர் தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட மூலவர் சிலைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது அகற்றப்படவில்லை. சில மாதங்களில் சிலை கருத்துப் போகவே, ஆபரணங்கள் வைக்கப்படும் லாக்கரில் வைக்கப்பட்டது.

ஆனால், ஐம்பொன் சிலையில் எந்தளவுக்கு ஐம்பொன் கலவை சேர்க்கப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. இதனைக் கடந்த 2019 ஆம் ஆண்டு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

'இந்து அல்லாதவர் நுழைய தடை'

பழனி தண்டாயுதபாணி கோயிலில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 'இந்து அல்லாதவர் நுழையத் தடை' என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. 'இந்துக் கோயில்களில் இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை' எனவும் கோயில் நிர்வாகத்தால் கூறப்பட்டது.

அதே ஜூன் மாதம் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் பழனி கோயிலுக்கு சுற்றுலா வந்தபோது அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 'மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை' எனக் கோயில் ஊழியர்கள் கூறிய விஷயம் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.

பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், 'பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டுத் தலம். அது ஒன்றும் சுற்றுலாத்தலம் அல்ல. கடந்த சில நாட்களாக கோயிலுக்குள் முஸ்லிம்கள் செல்ல முயல்கிறார்கள்' எனப் பதிவிட்டிருந்தார்.

அறிவிப்புப் பலகை சர்ச்சை குறித்து விளக்கமளித்த அப்போதைய இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "இந்துக்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இல்லை. இந்து கோயில்களின் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டால் எந்த மதத்தினரும் வழிபாடு மேற்கொள்ளலாம்." எனத் தெரிவித்தார்.

ரோப் கார் உயிரிழப்புகள்

பழனியில் 2004-ஆம் ஆண்டு ரோப் கார் சேவையை கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பழனி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் சென்ற ரோப் காரின் கயிறு அறுந்துவிழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது அறுந்துவிழுந்ததாக, கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 100 அடி பள்ளத்தில் ரோப் கார் விழுந்ததில் சென்னை ஆவின் நிறுவன பொதுமேலாளர் சுப்ரமணியன், ஆவின் அதிகாரி வடமலை செட்டி, அவரது மகள், மனைவி என நான்கு பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்போது விளக்கமளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "விபத்து குறித்து விசாரிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்படும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி எதிர்காலத்தில் விபத்து நேராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதில் அளித்தார்.

இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வருடாந்திர பராமரிப்புப் பணிகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்தவரிசையில் இந்த ஆண்டு, 'கடந்த 20 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது' என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முருகனை முன்வைத்து நடந்த சர்ச்சைகள்

தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து அரசியல்ரீதியாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

2015-ஆம் ஆண்டில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முருகனை முன்வைத்துப் பேசி வருகிறார். முருகனை முன்வைத்து 'வீரத்தமிழர் முன்னணி' என்ற அமைப்பையும் பழனியில் அவர் தொடங்கினார்.

தொடர்ந்து, தைப்பூச நாளில் வேல் வழிபாடு என்ற பெயரில் அக்கட்சியினர் விழாவை நடத்தி வருகின்றனர். சீமானுக்குப் பிறகு முருகனை முன்வைத்து பா.ஜ.க பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்தது.

2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம், முருகனின் கந்த சஷ்டி கவசத்தை 'கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் அவமதித்ததாக, பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க அளித்த புகாரைத் தொடர்ந்து, யூடியூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக. 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேல் யாத்திரையை நடத்தப் போவதாக அறிவித்தார், அப்போதைய பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன்.

2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை ஆறுபடை வீடுகள் வழியே டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவுக்கு வந்தது.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தி.மு.க அரசின் இந்துசமய அறநிலையத்துறை நடத்தியது. பகுத்தறிவுக் கொள்கையை பிரதானமாக முன்வைக்கும் தி.மு.க, முருகன் மாநாட்டை நடத்துவது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அனைத்துலக முருகன் மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டு மாநாடாக நடைபெறுவதாக, நிகழ்ச்சியில் காணொளி மூலமாக பங்கேற்ற அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அரசின் இந்த முடிவுக்கு திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. "இந்துசமய அறநிலையத்துறை என்பது கோயில் பாதுகாப்பு, நிதி, வரவு செலவுகளை நிர்வகிப்பதற்குத் தான் இருக்கிறது. இந்து மத பிரசாரத்திற்கானதல்ல" என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க தலைமையிலான அரசு பொறுப்பேற்ற சுமார் 70 நாட்களில் பழனியை முன்வைத்து நில மோசடி சர்ச்சை எழுந்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, புகார் எழுந்தது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்து அமைப்புகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன.

இந்த விவகாரம் பேசுபெருளாக மாறவே, கடந்த 22ஆம் தேதி பழனி கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளடக்கி புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, 'பழனி தண்டாயுதபாணி கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து கணக்கில் உள்ள சொத்துகள், வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள், சட்டவிரோத ஆக்ரமிப்புகள் ஆகியற்றை ஆய்வு செய்து முழுமையான அறிக்கையை தயார் செய்து வழங்கும்' என, இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு