You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அரசியல் அதிர்வலைகளை கிளப்பிய காக்ரோச் ஜனதா கட்சி - இனி என்ன ஆகும்?
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. போராட்டக்காரர்கள் வீடு திரும்பிவிட்ட நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தர் இயல்பாக காணப்படுகிறது. தற்போது காக்ரோச் ஜனதா கட்சியின் நோக்கம் நிறைவேறிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இந்திய அரசியலில் ஒரு மாதமாகச் செய்திகளில் இடம்பெற்ற சிஜேபி இனி விவாதங்களில் இருந்து மறைந்துவிடுமா அல்லது இதற்கு ஏதேனும் எதிர்காலம் உள்ளதா? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரித்தாலும் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் முற்றிலும் அரசியல் சார்பற்றதாகவே தெரிந்தது. திரைத்துறை மற்றும் விளையாட்டு துறையை சேர்ந்த பல பிரபலங்களும் சிஜேபியுடன் இணைந்து நின்றதை காண முடிந்தது.
சிஜேபியின் எதிர்காலம் குறித்து பிபிசியிடம் பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் சுதீர் குமார், சிஜேபி தனது நீண்ட கால அரசியல் லட்சியங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை, ஆனால் இதுவரை அவர்களின் பாணியைப் பார்க்கும்போது, அவர்களுக்கு எந்தவொரு அரசியல் லட்சியமும் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
"முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்வியை முன்னிறுத்தி டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளில் பல மாணவர் போராட்டங்கள் நடந்துள்ளன. அவர்கள் சோர்வை உணர்ந்து கொண்டிருந்த வேளையில், இந்த போராட்டம் அவர்களுக்குள் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது" என்கிறார் பேராசிரியர் சுதீர் குமார்.
மூத்த பத்திரிகையாளரும், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினருமான அசுதோஷ் கூறுகையில், ஏதேனும் ஒரு விவகாரத்திற்காக சிஜேபி மீண்டும் வீதியில் இறங்கிப் போராடும் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது. அது ஒரு அரசியல் கட்சியாகவும் மாறப் போவதில்லை. அதுதான் நல்லதும்கூட, ஏனெனில் இதுபோன்ற செயல்களால் இயக்கத்தின் கண்ணியம் சீர்குலைந்துவிடும். ஆம் ஆத்மி கட்சிக்குக் காலப்போக்கில் என்ன நிலை ஏற்பட்டது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது" என்றார்.
பாட்னாவில் உள்ள ஏ.என். சின்ஹா சமூக ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டி.எம். திவாகர் கூறும் போது, "போராட்டங்களில் இருந்துதான் அரசியல் கட்சிகள் உருவாகின்றன. கடந்த 1974 ஆம் ஆண்டு போராட்டத்தைக் கூட சாத்ர சங்கர்ஸ் வாகினி நடத்திக் கொண்டிருந்தது . பின்னர் இதிலிருந்துதான் ஜனதா கட்சி உருவானது, அவர்கள் இந்திரா காந்தியின் அரசை தோற்கடித்தனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிஜேபி அரசியல் கட்சி அல்ல, ஆனால் அவர்களின் செயல்திட்டம் அரசியல் சார்ந்தது. அவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், அவர்கள் சிஸ்டத்தை சீரமைப்பது மற்றும் பாஜக-வை அகற்றுவது போன்ற விஷயங்களை பேசுகிறார்கள். சிஜேபி ஜென் ஸி தலைமுறையை கொண்ட அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என நான் நினைக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய டி.எம். திவாகர், ஆம் ஆத்மி கட்சியிலும் ஆரம்பத்தில் அரசியல் அனுபவம் உள்ள தலைவர்கள் எவரும் இல்லை. ஆனால் அவர்கள் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றார்கள் என்றார்.
இந்தியாவில் மிக சமீபத்திய மற்றும் வெற்றிகரமான அரசியல் கட்சி என்றால் ஆம் ஆத்மியை கூறலாம். ஊழல் ஒழிப்பை முன்வைத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறியது.
அவர்களின் தலைவர்களும் தங்களது போராட்டத்திற்குப் பின்னால் எந்தவொரு அரசியல் லட்சியமும் இல்லை என ஆரம்பத்தில் மறுத்தனர். அந்த போராட்டம் பல மாதங்கள் வரை நீடித்தது.
இத்தகைய சூழலில், சில வாரங்கள் மட்டுமேயான சிஜேபியின் இந்த இயக்கத்தைப் பற்றி இப்போதே கணிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது.
இளைஞர் போராட்டம் குறித்து கூறும் அசுதோஷ், "சிஜேபியின் இந்த இயக்கம் 'ஜென் ஸி' தலைமுறைக்குள் ஒரு ஜனநாயக உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளைஞர்கள் வெறும் மீம்களை உருவாக்குவதிலும், சமூக ஊடகங்களில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார்கள் என மக்கள் கூறி வந்தனர், ஆனால் அந்த மாயை உடைந்துள்ளது. தேவைப்பட்டால் தாங்கள் வீதியிலும் இறங்குவோம் என்பதை ஜென் ஸி தலைமுறை நிரூபித்து காட்டியுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் எதேச்சதிகார அரசை ஜனநாயக பாதைக்கு திரும்ப கட்டாயப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர், நாட்டின் பிரதமரே இரவு 12 மணிக்கு ரீல் போடும் அளவிற்கு ஒரு போராட்டத்தை இங்கு கட்டியெழுப்புவார் என யார் நினைத்திருப்பார்கள்" என்றும் கூறினார்.
ஜூலை 26ஆம் தேதி ஏ.என்.ஐ முகமையிடம் பேசிய அபிஜித் தீப்கே, எங்களின் எதிர்கால உத்தியை விரைவில் அறிவிப்போம் என கூறி இருக்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு