விஜய் கர்நாடகா செல்வாரா? முரண்படும் அமைச்சர்கள் - கர்நாடகா தரப்பில் கூறப்படுவது என்ன?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்பதில் அமைச்சர்கள் வினோத், ராஜ்மோகன் ஆகிய இருவரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் கர்நாடகா செல்வாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 3-ஆம் தேதி விஜய் கர்நாடகா செல்லவிருப்பதாக அமைச்சர் வினோத் தெரிவித்திருந்த நிலையில், அந்த பயணத்தின் போது கர்நாடக முதல்வர் சிவக்குமாரை விஜய் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாயின.

"தமிழ்நாடு முதல்வர் விஜய் இந்தச் சந்திப்புக்கான கோரிக்கையை ஒரு தொலைபேசி உரையாடலின் போது விடுத்திருந்தார், ஆனால் சிவக்குமார் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை" என்று பெயர் வெளியிட விரும்பாத கர்நாடக அரசு அதிகாரி ஒருவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபற்றிய எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ள சிவக்குமார் மறுத்துவிட்டதே அவரது நிலைப்பாட்டின் முதல் அறிகுறியாக அமைந்தது.

"நாங்கள் இந்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இதர பணிகளில் மும்முரமாக இருக்கிறோம். சில விஷயங்களில், நாங்கள் அனைவருடனும் பேசவும், அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும், அனைவருடனும் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

தென்மேற்குப் பருவமழையின் சீரற்ற போக்கின் காரணமாக, கர்நாடகாவால் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விட முடியாத சூழ்நிலையில், விஜய்யிடமிருந்து இந்தச் சந்திப்புக்கான முன்மொழிவு வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கேஆர்எஸ் அணைக்கான நீர் வரத்து 713 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 1578 கனஅடியாகவும் இருந்தது. கபினி அணைக்கான நீர் வரத்து 2369 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 500 கனஅடியாகவும் இருந்தது.

தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 28.33 டிஎம்சி அடி தண்ணீருக்குப் பதிலாக 3.44 டிஎம்சி அடி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளதாக ஜூலை 22 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், பருவமழை குறைவாகவே பெய்ததால் கேஆர்எஸ் அணைக்கு நீர் வரத்து குறைந்துவிட்டதாகக் கர்நாடகா கூறுகிறது. மற்ற விவகாரங்களை விடக் குடிநீருக்கே தங்களின் முன்னுரிமை என்று கர்நாடகா தெரிவிக்கிறது.

ஜூலை 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவக்குமார் தலைமையில் நடந்த வறட்சி நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பிறகான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், தற்போது கையிருப்பில் உள்ள தண்ணீர் குடிநீர்த் தேவைகளுக்கு மட்டுமே போதுமானது என்று கூறியிருந்தார்.

மேகேதாட்டு திட்டம் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் என்று கர்நாடகா கூறி வந்தாலும், தமிழ்நாடு இந்தத் திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களும் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

ஒருவேளை, இரு முதல்வர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தால், அது 14 ஆண்டுகளில் நடக்கும் முதல் பேச்சுவார்த்தையாக இருக்கும். கடந்த ஐந்து தசாப்தங்களில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் இல்லாமல், இரு மாநில முதல்வர்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது முதல் முறையாக இருக்கும் என்பதால் அது முக்கியத்துவம் பெறும்.

முந்தைய சந்திப்புகளில் பெரும்பாலானவை உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலினால் நடந்தவை. இதில் 1996 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் அப்போதைய தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதல்வர்களான மு.கருணாநிதி மற்றும் ஜே.எச். படேல் ஆகியோருக்கு இடையே நடந்த ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் அடங்கும்.

தமிழ்நாட்டில் ஜெ. ஜெயலலிதா, கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய இருவரும் முதல்வர் பதவி வகித்த போது 14 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் சந்தித்தன. ஆனால் இருவரும் காவிரி நீர் பகிர்வு குறித்து தத்தமது நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருந்தனர்.

வறட்சி நிலவும் ஆண்டில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளும் கேள்விக்கு இரு மாநிலங்களும் எப்போதும் தீர்வு காணாமல் தவித்து வருகின்றன. ஆனால், மற்ற விவகாரங்களில் எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, இந்த இரண்டு முதல்வர்களின் அணுகுமுறையும் முந்தையவர்களை விட வித்தியாசமாக இருந்துள்ளது.

ஜூன் 25 அன்று, கர்நாடகாவின் ஹோஸ்பேட்டில் உள்ள அனைத்து 33 ஸ்பில்வே கிரெஸ்ட் கேட்டுகளையும் முழுமையாக மாற்றி அமைத்து நவீனப்படுத்துவதற்கான தொடக்க விழாவில், ஆந்திரப் பிரதேசம் (சந்திரபாபு நாயுடு) மற்றும் தெலங்கானா (ரேவந்த் ரெட்டி) ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் சிவக்குமார் இணைந்து பங்கேற்றார்.

இது 2024 ஆகஸ்டில் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக அடித்துச் செல்லப்பட்ட கிரெஸ்ட் கேட் எண் 19ஐ மாற்றுவதற்காகச் செய்யப்பட்டது. மூன்று மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்ததால், இந்த மூன்று மாநிலங்களின் ஒத்துழைப்பு சாத்தியமானது.

தென்னக மாநிலங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.

"கர்நாடகா வளரும்போது, இந்தியாவும் வளர்கிறது. தமிழ்நாடு வெற்றி பெறும்போது, இந்தியாவும் வெற்றி பெறுகிறது. தெலங்கானா புதுமைகளைப் புகுத்தும்போது, இந்தியாவும் புதுமைகளைப் புகுத்துகிறது. கேரளா மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும்போது, இந்தியா மேலும் பலமடைகிறது," என்று சிவக்குமார் கூறியிருந்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத், ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருப்பதாகத் தெரிவித்திருந்தார். முதல்வரின் அந்தப் பயணத்தின் போது மேகேதாட்டு அணை தொடர்பாக பேசப்படுமா என்பது குறித்து இனிதான் தெரியும் என்று கூறினார். அதே நேரம் மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அதை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

'விஷப் பரீட்சை வேண்டாம்' - மு.க.ஸ்டாலின்

தமிழக - கர்நாடக முதல்வர்கள் சந்திக்கக் கூடும் என்று தகவல் வெளியான நிலையில், திமுக அதனை எதிர்த்துள்ளது. காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'வேண்டாம் இந்த விஷப் பரீட்சை' என்றும் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை தி.மு.க நிராகரித்தது.

கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

'இது மிகவும் தவறு' - அன்புமணி ராமதாஸ்

கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேசக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

"மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது," என்றும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத் தான் முதலமைச்சர் விஜய் அவர்கள் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு." என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்னை அல்ல என்று கூறும் அன்புமணி அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும் தான் என்றும் தெரிவிக்கிறார்.

"மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்னையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்ட போதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்திவிடும்." என்றும் அவர் கூறினார்.

சிடிஆர் நிர்மல்குமார் பதில்

இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்துள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "மேகேதாட்டு விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாக முதலமைச்சர் சட்ட வல்லுநர்கள் உள்பட பல கட்ட ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார். விரைவாக அதில் என்ன செய்ய வேண்டுமோ அதை ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். நமது விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய உரிமைகளையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.

விஜய் கர்நாடகா செல்வாரா?

இந்த நிலையில் இன்று (26-07-2026) காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், "தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலம் விட்டு மாநிலமோ, தேசியப் பிரச்னைக்கோ, நதிநீர் பிரச்னைக்கோ கருத்து சொல்வதென்றால் முதல்வர் அவர்கள் மட்டும் தான் சொல்வார். வேறு யார் சொல்வதும் அதிகாரப்பூர்வமானது கிடையாது. நன்கு பேசி ஆலோசனை செய்து முதல்வர் அவர்களே அதனை அறிவிப்பார். அது உறுதியான தகவல் அல்ல." என்றார்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வினோத்திடம், அமைச்சர் ராஜ்மோகன் கூறியதைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வினோத், "தலைமை அலுவலகத்தில் இருந்து இது தொடர்பாக அறிவிப்பு வரும்." என்று மட்டும் பதிலளித்தார்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு