செம்பருத்தி, மல்லிகை உள்பட நாம் உண்ணத்தக்க 5 பூக்கள் மற்றும் பலன்கள்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செம்பருத்தி, சங்குப்பூ போன்றவற்றை தேநீரில் கலந்து அருந்துவது சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு டிரெண்டாக உள்ளது. சில பூக்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ குணம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதனை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் பூக்கள் பலவித பிரச்னைகளுக்கு சிகிச்சையின் ஒருபகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. என்றாலும், பூக்களை நாம் உணவுப்பொருளாக சேர்த்துக்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பூக்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா, அப்படி அதில் என்ன உள்ளது? என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை பேராசிரியர் முல்லைநாதன் கூறுகையில், "ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் பூக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பூக்களை நாமே உணவின் ஒரு பகுதியாக எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பூவின் எந்த பகுதியை உண்ணலாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சில தாவரங்களின் இலைகள், பூக்களில் நச்சுகள் உள்ளன. அப்படியே எடுத்து சாப்பிட்டால், பக்க விளைவுகள் ஏற்படும். சில தாவரங்களில் அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்" என்றார்.

அதேபோன்று, ஒரு பூவை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும் எனக்கூறும் அவர், அளவுக்கதிகமாக எடுத்தால் பக்க விளைவுகள் இருக்கும் என்றார்.

எதையும் எடுத்துக் கொள்ளும் முன்பாக அதன் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறும் பேராசிரியர் முல்லைநாதன், அதனுடன் வேறு ஏதாவது பதப்படுத்தியை சேர்த்து உபயோகிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

"அதை ஒரு உடல்நல பிரச்னையை மேம்படுத்துவதற்கான மருந்தின் அங்கமாகத்தான் பார்க்க வேண்டும். அதற்கேற்ற அளவிலேயே உபயோகிக்க வேண்டும். தினமும் எடுத்துக்கொள்ளக் கூடாது." என்றார்.

இதையே வலியுறுத்தும் சித்த மருத்துவர் கு.சிவராமன், பூக்களின் சிறப்பு பண்புகளையும் விளக்கினார்.

"பூக்களில் உள்ள நிறமி பொதுவாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது. சிவப்பு நிறத்தில் லைக்கோபின் (lycopene) எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. ஊதா நிறத்தில் ஆந்தோசயனின் (anthocyanins) எனும் நிறமிச் சத்து உள்ளது. ரோஜா, செம்பருத்தி, சங்குப்பூ, ஆவாரம் பூக்களை தேநீரில் கலந்து சாப்பிடும் வழக்கம் இந்தியா மட்டுமால்லாமல் ஐரோப்பாவிலும் மரபாக இருந்துவந்துள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமின்றி, அதன் சாற்றிலிருந்து எண்ணெய் எடுத்து, அதை மருந்துகள், சிரப்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன." என்றார்.

எப்படி உண்ணக்கூடாது?

யாரெல்லாம் பூக்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் மருத்துவர் கு.சிவராமன் விளக்கினார்.

"பூக்களை நோய்க்கான ஒரு மருந்தாக கருதக்கூடாது. மாறாக ஒரு சப்ளிமெண்ட் போன்று அதனுடன் சேர்த்து எடுக்கலாம். அதேபோன்று, ஏற்கெனவே ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருந்தின் பலன், ஒரு பூவை நாம் உணவுப்பொருளில் சேர்க்கும்போது பாதிக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்" என்றார்.

அவரது கூற்றின்படி,

  • அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பூக்களை உணவுப்பொருளாக பயன்படுத்தக் கூடாது.
  • மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எந்தவொரு பூவையும் திடீரென பயன்படுத்தக் கூடாது. அதற்கு தகுந்த வலுவான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
  • ஒரு பூ, ஒரு நோயைக் கட்டுப்படுத்தும் என்றால் அந்நோய்க்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அப்படியே நிறுத்திவிட்டு எடுக்கக் கூடாது. அதை ஒரு மருந்து என்ற அளவிலேயே எடுக்க வேண்டும். எந்த அளவில், எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஆலோசனைகளை பெற வேண்டும்.

பரவலாக பயன்படுத்தப்படும் சில பூக்களையும் அதன் மருத்துவ குணங்களையும் பார்க்கலாம்:

செம்பருத்தி

ஹைபிஸ்கஸ் ரோசா-சினென்சிஸ் (hibiscus rosa-sinensis) எனும் தாவரவியல் பெயரைக் கொண்ட செம்பருத்தி மூலம் தயாரிக்கப்படும் தேநீர் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளது. அதன் பூ முழுவதையும் குறிப்பாக அதன் இதழ்கள் உண்ணத் தகுந்தவை. அதன் இதழ்களை பச்சையாகவோ அல்லது காயவைத்தோ தேநீர், ஜூஸ், சிரப் போன்றவற்றிலோ கலந்து அருந்தலாம். செம்பருத்தி பூவிதழ்கள் மூலம் சட்னி தயாரிக்கும் வீடியோக்கள் கூட இணையத்தில் பிரபலம்.

செம்பருத்தி இதழ் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடும் என சில ஆய்வுகள் கூறுகின்றன. இதுவொரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்றும் அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டிருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. செம்பருத்தியில் காணப்படும் ஃபிளாவனாய்டு (Flavonoids) மற்றும் பாலிஃபெனாலிக் சேர்மங்கள் அழற்சிக்கு எதிரான பண்புகளையும் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

செம்பருத்தியிலுள்ள ஆந்தோசயனின் (anthocyanin) ரத்த அழுத்தத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை அவதானிக்க, எலிகளுக்கு ஒரு மாதத்துக்கு செம்பருத்திச் சாறு வழங்கப்பட்டுவந்தது. அதன்மூலம், அவற்றுக்கு சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் சீரானதாக தெரியவந்தது என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் செம்பருத்திப் பூச்சாற்றை வாய்வழியாக உட்கொள்வது தமனி ரத்த அழுத்தத்தைக் குறைத்தது என்று முடிவுகள் காட்டியதாக என்.ஐ.ஹெச் ஆய்வு குறிப்பிடுகிறது.

மல்லிகை

ஜாஸ்மினம் சம்பாக் ஐட்டன் (Jasminum sambac (L.) Aiton) எனப்படும் மல்லிகையில் அதன் மொட்டுகள் மற்றும் இதழ்கள் உண்ணக்கூடியவை. காயவைத்தோ அல்லது பச்சையாகவோ உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மூலிகை தேநீர் அல்லது பானங்களில் இதன் பூக்களை சேர்த்துக் கொள்ளலாம். உணவை அலங்கரிப்பதிலும் மல்லிகைப்பூ பயன்படுத்தப்படுகிறது. மல்லிகைப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் இனிப்புகள், பிஸ்கெட்டுகள், தின்பண்டங்கள், சூயிங்கம், மிட்டாய் போன்றவற்றில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

மல்லிகையில் உள்ள டெர்பனாய்டு (terpenoid) எனும் ரசாயனத்தில் பூஞ்சை தொற்றுக்கு எதிரான பண்புகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா போன்ற பிராந்தியங்களில், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு மல்லிகைப்பூ பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மல்லிகைப்பூவின் நறுமணத்துக்கு அமைதியை ஏற்படுத்தும் தன்மை இருப்பதாகவும் கூறுகிறார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

"சில காலமாக பூக்கள் மூலம் தெரபி அளிக்கப்படுகிறது. இது ஃபிளவர் தெரபி எனப்படுகிறது. இதில், பூக்கள் அமைதியைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. அது இத்தகைய தெரபியில் பலன்களை அளிக்கின்றன" என்றார் அவர்.

சாமந்தி

கிரைசாந்திமம் இண்டிகம் (crysanthimum indicum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இந்தப் பூவை, பச்சையாகவோ அல்லது காயவைத்தோ பயன்படுத்தலாம். மூலிகை தேநீரில் கலந்து அருந்தலாம்.

இந்த பூவில் காய்ச்சலைக் குறைப்பதற்கான பண்புகள் உள்ளதாகவும் சில கண் பிரச்னைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளிட்ட உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்களால் இவற்றுக்கு காய்ச்சலைக் குறைப்பதற்கான பண்புகள் இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்த பூவில் அழற்சிக்கு எதிரான பண்புகள் இருப்பதாகவும் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

சங்குப்பூ

கிளிட்டோரியா டெர்னேட்டீ (clitoria ternatea) என்ற தாவரவியல் பெயரையுடைய இந்த பூவை வைத்து செய்யப்படும் உணவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளன. சங்குப்பூ தேநீர், இட்லி, தயிர் சாதம் என பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பச்சையாகவோ அல்லது காய வைத்தோ தேநீர் உள்ளிட்ட பானங்களில் கலந்து அருந்தலாம்.

இது ஆன்டி-ஆக்ஸிடண்டாகவும் அழற்சிக்கு எதிராகவும் செயல்படும் பண்புகளை கொண்டிருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதே ஆய்வில், 15 ஆரோக்கியமான ஆண்களிடம் நடத்தப்பட்ட ஒரு சிறிய அளவிலான மருத்துவப் பரிசோதனையில், 50 கிராம் சுக்ரோஸுடன் சேர்த்து 1 அல்லது 2 கிராம் சங்குப்பூ சாற்றை உட்கொள்ளும்போது, ​​ரத்த பிளாஸ்மாவில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகள் குறைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

எலிகள் மற்றும் சில மருத்துவ பரிசோதனைகளில் சங்குப்பூ சாறு மூலம் நினைவாற்றலில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பூ பல்வேறு வகையான மருந்தியல் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும், இவற்றில் பல ஆய்வுகள் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளன; எனவே, இவை குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மேரிகோல்ட்

டேகெட்ஸ் எரெக்டா (Tagetes erecta) என்ற தாவரவியல் பெயரையுடைய இந்த பூவை தேநீரில் பச்சையாகவோ அல்லது காய வைத்தோ பயன்படுத்தப்படுகிறது. உணவுகளில் இயற்கையான நிறமியாகவோ, சாலட்டுகளிலோ இந்த பூ பயன்படுத்தப்படுகிறது.

இதில் காணப்படும் ஸந்தோஃபைல் (Xanthophyll) எனப்படும் மஞ்சள் நிறமி, வயது முதிர்வால் ஏற்படும் மகுலா டீஜெனரேஷன் எனப்படும் ஒருவகை கண் பிரச்னையை தடுக்க பயன்படுத்தப்படுவதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பூக்கள் மருத்துவ குணமுடையது என்ற போதிலும் மருத்துவ நோக்கில் பயன்படுத்தும் போது உரிய மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு