92 வயதிலும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்

    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இதுவரை நீங்கள் சந்தித்த மருத்துவர்களில் மிக அதிக அனுபவம் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? 30 வருடம் என்பதாக இருக்குமா? 40? 50? ஆனால் சுமார் 70 வருட அனுபவம் உள்ள ஒரு மருத்துவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா?

மருத்துவரின் வயது 70 அல்ல... துல்லியமாகச் சொன்னால் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற பிறகு 68 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவையாற்றிவரும் மருத்துவர் ஒருவரை நான் கண்டறிந்தேன்.

அத்தகைய அரிய பெண் மருத்துவர் ஹைதராபாத்தில் வசிக்கிறார். 92 வயதிலும் அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

1958-ல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று மருத்துவராக தனது பணியைத் தொடங்கிய டாக்டர் சூரி ஸ்ரீமதி, இன்றும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் தினமும் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டு, அவ்வப்போது சிசேரியன் அறுவை சிகிச்சைகளையும் செய்துகொண்டு, ஓர் இளம் மருத்துவரைப் போல மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார்.

நடப்பதற்கும், தங்களது அன்றாடக் கடமைகளைச் செய்வதற்கும் பலரும் சிரமப்படும் வயதில், இவர் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஸ்டெதாஸ்கோப்பை கையாள்வது மட்டுமல்லாமல், அறுவை சிகிச்சை கத்தியையும் கையாள்கிறார்.

தானே காரை ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் டாக்டர் ஸ்ரீமதியின் நினைவாற்றல் 92 வயதிலும் கூர்மையாகவே உள்ளது, மேலும் அவரது கைகள் நடுங்குவதில்லை.

அறுவை சிகிச்சைகள் செய்யும்போது அவரது கைகள் எப்போதாவது நடுங்கியதா என்று நான் அவரிடம் கேட்டேன்.

"நடுங்காது" என்று கூறும் அவர், "இதோ என் கைகளைப் நீங்களே பாருங்கள்.." என்று சொல்லி என்னிடம் தனது கைகளைக் காட்டினார். மற்ற மருத்துவர்களைப் போலவே தனக்கும் மருந்துகளின் பெயர்கள் நினைவில் இருப்பதாக ஸ்ரீமதி குறிப்பிட்டார்.

மூன்று தலைமுறைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்

"அவரது கைகள் ஒருபோதும் நடுங்குவதில்லை. ஒருவேளை நமது கைகளாவது நடுங்குமே தவிர, அவரது கைகள் அசையாது. யோகா, தியானம், சீரான உணவுமுறை, தொழில்மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன அழுத்தமில்லாத அமைதி, கட்டுப்பாடான வாழ்க்கைமுறைதான் இதற்குக் காரணம். தூக்கத்தைக் கூட மறந்து அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியும்" என டாக்டர் ஸ்ரீமதியின் சக மருத்துவரான டாக்டர் ரஜினி குமாரி பிபிசியிடம் கூறினார்.

ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகளான பாட்டி, அம்மா, பேத்தி வரை அனைவருக்கும் மகப்பேறு மருத்துவம் பார்த்த பெருமை பெற்றவர் டாக்டர் ஸ்ரீமதி. "பலரும் தங்களின் சிறுவயது புகைப்படங்களை என்னிடம் காட்டி, 'எனக்கு பிரசவம் பார்த்ததே நீங்கள்தான்' என்று சொல்வார்கள்" என்றார் டாக்டர் ஸ்ரீமதி.

"நோயாளிகளின் குறைகளை மிகவும் பொறுமையோடு கேட்பார். 24 மணிநேரமும் எப்போது அழைத்தாலும் சலிப்பின்றி பதிலளிப்பார். முதன்முதலில் அவரைப் பார்த்தபோது, 'இவ்வளவு வயதான மருத்துவரால் சரியாக சிசேரியன் செய்ய முடியுமா?' என்று சற்று பயமாகவே இருந்தது. ஆனால், நாளடைவில் பிற நோயாளிகளின் நேர்மறையான அனுபவங்களையும், அவர் எங்களைக் கவனித்துக் கொண்ட விதத்தையும் பார்த்த பிறகு என் பயம் முற்றிலும் விலகி நம்பிக்கை வந்தது.

அறுவை சிகிச்சையின் போது உதவியாளர்கள் இருந்தாலும், மிக முக்கியமான பகுதிகளை அவரே முன்னின்று செய்வார். எனது மூன்றாவது பிரசவத்தின் போது அவசர நிலை ஏற்பட்ட செய்தி அறிந்ததும், தேநீர் கூட அருந்தாமல் உடனடியாக ஓடோடி வந்தார். பிரசவம் முழுமையாக முடிந்த பிறகே உணவு அருந்தச் சென்றார்" என்று அவரிடம் பிரசவம் பார்த்துக்கொண்ட துளசி என்ற பெண் தனது அனுபவத்தை பிபிசியிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளும் பண்பு

மருத்துவத் துறை மிகவும் வேகமாக மாற்றமடைந்து வரும் ஒரு துறையாகும். இதில் புதிய மருந்துகள், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் நோயறிதல் பரிசோதனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய மாற்றங்களுக்கு மத்தியில், தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

"நான் மருத்துவ மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்கிறேன்; அத்துடன் மருத்துவக் கட்டுரைகள் மற்றும் ஆய்விதழ்களையும் வாசிக்கிறேன். மருத்துவப் பிரதிநிதிகள் புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தும்போது, ​​அதுகுறித்த சமீபத்திய முன்னேற்றங்களை நான் தெரிந்துகொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

"இத்துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து இன்றும் தொடர்ந்து கற்றுக்கொள்வது அவரது சிறந்த பண்புகளில் ஒன்றாகும்; ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்போது அதை புரிந்துகொள்வதை அவர் உறுதிசெய்துகொள்கிறார்" என்று டாக்டர் சூரியுடன் இணைந்து அறுவை சிகிச்சைகளில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவரான டாக்டர் ரஜனி குமாரி விளக்கினார்.

"அவர் அனைவருக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கி, அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதிலளிக்கிறார், ஒருபோதும் சலித்துக்கொள்ள மாட்டார்" என்றும் அவர் கூறுகிறார்.

அரசு மருத்துவராக...

டாக்டர் சூரி ஸ்ரீமதி 1958-ல் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றார். (அந்தக் காலத்தில் மருத்துவப் பட்டப்படிப்புகள் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்பட்டன.) பின்னர் சில காலம் அரசு மருத்துவராகப் பணியாற்றிய அவர், மகப்பேறு மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றார். அதன்பிறகு ஹைதராபாத்தில் நீண்ட காலம் மருத்துவப் பணியாற்றினார்.

"எம்பிபிஎஸ் முடித்த பிறகு, சங்கரெட்டியிலுள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராகச் சேர்ந்தபோது, ​​நான் கையாண்ட முதல் மருத்துவச் சம்பவம் 13 அல்லது 14 வயதுடைய ஒரு சிறுமியைப் பற்றியது. 'என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள், தயவுசெய்து பரிசோதியுங்கள்' என்று கூறி அவளது தாய் அவளை அழைத்து வந்திருந்தார். நான் அவளைப் பரிசோதித்தபோது ஆச்சரியமடைந்தேன்; அந்தச் சிறுமி ஏற்கனவே கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில் இருந்தாள். அதுவே நான் கையாண்ட முதல் மருத்துவச் சம்பவம்.'' என்று அவர் நினைவுகூர்கிறார்.

''நான் மயக்க மருந்து அளித்து சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன். அந்த மருத்துவமனையில் வேறு மருத்துவர்கள் யாரும் இல்லாததால், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் என அனைத்துப் பணிகளையும் நானே ஒரே நேரத்தில் செய்தேன்."

தற்போது, ​​அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்தே தனியார் மருத்துவச் சேவையை வழங்கி வருகிறார். தற்போது ஸ்ரீமதி புறநோயாளிப் பரிசோதனைக்கு 300 ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார். கட்டணம் செலுத்த முடியாதவர்களிடம் பணத்தைப் பெறுவதில்லை என்று கூறினார்.

"இது வருமானத்தைப் பற்றியது அல்ல... யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்காமல் திருப்திகரமான வருமானத்தை ஈட்டியுள்ளேன். அந்த மனநிறைவு என்னிடம் உள்ளது," என்று டாக்டர் ஸ்ரீமதி கூறினார்.

இருப்பினும், சிசேரியன் அறுவை சிகிச்சைகளை டாக்டர் ஸ்ரீமதி படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். மாதத்திற்கு ஒன்று முதல் மூன்று அல்லது நான்கு மட்டுமே செய்கிறார். தற்போது சிசேரியன் செய்யும்போது அவருக்கு மற்றொரு மகப்பேறு மருத்துவர் உதவியாக இருக்கிறார்; எனினும், முக்கிய அறுவை சிகிச்சை நடைமுறையை அவரே மேற்கொள்கிறார்.

"1986-இல் சீனியர் ஹவுஸ் சர்ஜனாக மேடமிடம் சேர்ந்தேன். அன்றிலிருந்து நான் மேடமுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறேன். அப்போதிருந்து அவருடனான தொழில்முறைத் தொடர்பு தொடர்ந்து வருகிறது. எனக்கு அறுவை சிகிச்சை கற்றுக்கொடுத்த குரு அவர்தான். எனக்குப் பெரிய மருத்துவமனைகளில் எவ்வளவு வேலை மற்றும் தேவை இருந்தாலும், டாக்டர் ஸ்ரீமதியின் நோயாளிகளுக்கான சிகிச்சைகளுக்கே நான் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறேன். நாங்கள் இருவரும் இருக்கும் வரை இந்த நடைமுறை தொடரும்," என்று டாக்டர் ரஜினி குமாரி பிபிசியிடம் கூறினார்.

ஏழு தசாப்தங்களுக்கு முன்பு முதன்முதலில் அறுவை சிகிச்சைக்கான கத்தியைக் கையில் எடுத்ததிலிருந்து அறுவை சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கேட்டபோது, "அறுவை சிகிச்சை முறைகள், தையல் போடும் பொருட்கள், மயக்க மருந்து கொடுக்கும் முறைகள் என இவையெல்லாம் மிகவும் மாறிவிட்டன. அந்தப் புதிய முறைகளுக்கு ஏற்ப என்னையும் மாற்றிக்கொண்டு, அவற்றைக் கற்றுக்கொண்டேன்" என டாக்டர் ஸ்ரீமதி பதிலளித்தார்.

"பல நோயாளிகளுக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அடிப்படை வசதிகள் ஏதுமற்ற காலக்கட்டத்தில்கூட அவர் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் நாங்கள் மாதத்திற்கு 120 கர்பிணிகளுக்கு பிரசவங்கள் பார்த்திருக்கிறோம். அதுவும் பெரும்பாலும் முறையான வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில்தான். அவருடைய திறமை மற்றும் அவர் பேசும் விதத்திற்காகவே பலரும் அவரிடம் வருகிறார்கள்" என டாக்டர் ரஜினி குமாரி நினைவுகூர்ந்தார்.

மருத்துவத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என்று கேட்டபோது ஸ்ரீமதி சுவாரஸ்யமான ஒரு பதிலைக் கூறினார்.

"அக்காலத்தில், எங்கள் பெற்றோர் எதைச் சொல்கிறார்களோ அதையே நாங்கள் படிப்போம். என் தந்தை நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார், அதனால் நானும் அதையே படித்தேன். அப்போது நுழைவுத் தேர்வுகள் எதுவும் இல்லை; மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டன. உண்மையில், நான் குழந்தைகள் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறவே விரும்பினேன். ஆனால் என் தோழிகள் அனைவரும் மகப்பேறு மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்து, என்னையும் அவர்களுடன் அழைத்துச் சென்றுவிட்டார்கள்" என்று தனது மருத்துவப் பயணம் தொடங்கிய விதத்தைப் பகிர்ந்துகொண்டார் ஸ்ரீமதி.

டாக்டர் ஸ்ரீமதி திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ​​"அது அமையவில்லை, அவ்வளவுதான்" என்று எளிதாகக் கூறி அதைத் தவிர்த்துவிட்டார்.

"எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே என் சகோதரியை ஒரு மருத்துவராகவே நான் பார்த்து வருகிறேன். ஏராளமான நோயாளிகள் வருவார்கள், அவர் அவர்களைப் பரிசோதிப்பார். அதற்கு நேர காலம் எதுவுமில்லை; எப்போது அவசரமாகத் தேவைப்பட்டாலும் அவர் மருத்துவம் பார்ப்பார்" என்று பிபிசியிடம் கூறினார் டாக்டர் ஸ்ரீமதியின் தம்பி சூரி ராமநாத சாஸ்திரி.

ஸ்ரீமதியை விட 19 ஆண்டுகள் இளையவரான ராமநாத சாஸ்திரி, விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். டாக்டர் ஸ்ரீமதி தற்போது தனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து தங்கள் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த வயதிலும் தன் சகோதரி இவ்வளவு கடினமாக உழைப்பதை அவர் விரும்பவில்லை என்றாலும், "வேலையை நிறுத்துமாறு அவரிடம் சொல்ல எனக்குத் துணிச்சல் இல்லை. அவரது ஆற்றலும் அர்ப்பணிப்பு உணர்வும் வியக்கத்தக்கவை. அவசர மருத்துவ உதவி தேடி வரும் ஒருவரைப் பார்க்க வேண்டாம் என்று நான் எப்படி அவரிடம் சொல்ல முடியும்?" என்றார் ராமநாத சாஸ்திரி.

தற்போது, உலகம் முழுவதும் முன்கூட்டியே ஓய்வு பெறுவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், தொண்ணூறு வயதைக் கடந்தும் ஏன் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்று கேட்டபோது, ​​ "இறைவன் எனக்குத் வலிமை அளிக்கும் வரை நான் பணியாற்றுவேன். உணவு உண்பதில் இருந்தும் ஓய்வெடுப்பதில் இருந்தும் நாம் விலகாத போது, வேலை செய்வதிலிருந்து மட்டும் ஏன் ஓய்வு பெற வேண்டும்?" என்று திருப்பிக் கேட்டார் ஸ்ரீமதி.

மருத்துவத் துறைக்கு வர விரும்புகிறவர்களுக்கு அறிவுரை கூறிய அவர், "நீங்கள் அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்தினால், செழிப்பு தானாகவே உங்களைத் தேடி வரும். கட்டணங்கள் அல்லது வருமானத்தின் பின்னால் ஓடாதீர்கள். உங்கள் சேவையைத் தொடர்ந்து செய்யுங்கள்; மற்ற அனைத்தும் தானாகவே அமையும்" என்று கூறினார்.

இத்தனை ஆண்டுகால உங்களது மருத்துவப் பயணத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லமுடியுமா என்று கேட்டதற்கு, "மகிழ்ச்சியும் ஆத்மதிருப்தியும்..." என்றார் டாக்டர் ஸ்ரீமதி.

டாக்டர் ஸ்ரீமதி கூறிய ஆரோக்கிய ரகசியங்கள்:

  • ''தினமும் அதிகாலையில் எழுந்து யோகா மற்றும் பிராணாயாமம் செய்வேன். அவ்வப்போது தொலைக்காட்சி பார்ப்பேன்
  • காலையில் நல்ல தூய காற்றில் பிராணாயாமம் செய்ய வேண்டும். அது உடலுக்குப் போதிய ஆக்சிஜனை அளிக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
  • எளிதில் செரிமானமாகக்கூடிய எந்த உணவையும் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் ஊட்டச்சத்துகள் இருக்காது; அது நாவிற்கு மட்டுமே தவிர உடலுக்கு அல்ல.
  • சரியான நேரத்திற்கு உணவும், சரியான நேரத்திற்குத் தூக்கமும் அவசியம். உடலின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் மிகவும் முக்கியமானவை.
  • எங்கள் காலத்தில், வெளிப்புற விளையாட்டுகள், வீட்டு வேலைகள் மற்றும் கோலம் போடுதல் போன்றவற்றின் மூலம் சூரிய ஒளி எங்கள் மீது படுமாறு அமைந்தது. நாங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நடந்தே சென்றோம், இது எங்கள் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தது. இப்போதெல்லாம் உடல் இயக்கம் குறைந்துவிட்டது.
  • சூரிய ஒளி உடலில் படுமாறு பார்த்துக்கொள்வதும், வழக்கமான உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் அவசியம்.
  • வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும், சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும், போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வெடுக்கும் வழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.'' என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு