இந்தியாவில் அரசியல் அதிர்வலைகளை உருவாக்கிய சிஜேபி இனி என்ன ஆகும்?

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியின் ஜந்தர் மந்தரில் இப்போது சூழல் வழக்கமான நாட்களைப் போல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இங்கு நடந்து வந்த போராட்டங்களின் ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்கும் முயற்சியில் புதுடெல்லி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒருபுறம் சுவர்களில் எழுதப்பட்டிருந்த முழக்கங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன, மறுபுறம் இங்குள்ள சாலைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.

சிஜேபியின் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அவரது ஆதரவாளர்களும் ஜந்தர் மந்தரிலிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர். அபிஜித் தீப்கே, தனது அடுத்தகட்ட உத்திகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் அதன் நோக்கம் நிறைவேறிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இந்திய அரசியலில் ஒரு மாதமாகச் செய்திகளில் இடம்பெற்ற சிஜேபி இனி விவாதங்களில் இருந்து மறைந்துவிடுமா அல்லது இதற்கு ஏதேனும் எதிர்காலம் உள்ளதா?

இந்தக் கட்டுரையில், சில நிபுணர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், சமூக ஊடகங்களில் ஒரு நகைச்சுவை மூலமாக உருவான 'ஜென் ஸி' (Gen Z) இன் இந்த தளம், வரும் நாட்களிலும் தனது தாக்கத்தைக் காட்ட முடியுமா என்பதை அறிய நாம் முயற்சிப்போம்.

சிஜேபி இனி என்ன ஆகும்?

காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் முற்றிலும் அரசியல் சார்பற்ற ஒன்றாகவே காணப்பட்டது. இருப்பினும், அவர்களின் மேடையில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல், சிவசேனா (உத்தவ் தாக்கரே), என்சிபி (சரத் பவார்) போன்ற பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காணப்பட்டனர்.

இதனுடன், திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் சிஜேபியுடன் இணைந்து நின்றதைக் காண முடிந்தது.

"சிஜேபி தனது நீண்ட கால அரசியல் லட்சியங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை, ஆனால் இதுவரை அவர்களின் பாணியைப் பார்க்கும்போது, அவர்களுக்கு எந்தவொரு அரசியல் லட்சியமும் இருப்பதாகத் தெரியவில்லை" என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் சுதீர் குமார் கூறுகிறார்.

"முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்வியை முன்னிறுத்தி டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளில் மாணவர்களின் பல போராட்டங்கள் நடந்துள்ளன, அவர்கள் சோர்வை உணர்ந்து கொண்டிருந்த வேளையில், இந்த போராட்டம் அவர்களுக்குள் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது." எனபது பேராசிரியர் சுதீர் குமாரின் கூற்று.

"இந்த போராட்டத்தில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் மிகவும் அதிவேகமாக தங்களின் செயல்திட்டத்தில் சேர்க்கத் தொடங்கியுள்ளன. காவல்துறை நடவடிக்கை, மக்கள் காவலில் எடுக்கப்பட்டது மற்றும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிக விரைவாகச் செயல்பட்டன" என்று கூறினார்.

காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மைக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, இந்த இயக்கமும் சிஜேபியும் இப்போது முடிவுக்கு வந்துவிடுமா?

மூத்த பத்திரிகையாளரும், ஒரு காலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்தவருமான அசுதோஷ் கூறுகையில், "சிஜேபி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரத்தை ஆற்றியுள்ளது என்றே நான் நினைக்கிறேன். நரேந்திர மோதி போன்ற ஒரு சக்திவாய்ந்த தலைவரைப் பணிய வைக்க முடியும் என்றும், ஓர் அமைச்சரின் ராஜினாமாவைப் பெற முடியும் என்றும் அவர்கள் ஒரு வழியைக் காட்டியுள்ளனர்" என்றார்.

"ஏதேனும் ஒரு விவகாரத்திற்காகச் சிஜேபி மீண்டும் வீதியில் இறங்கிப் போராடும் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது. அது ஒரு அரசியல் கட்சியாகவும் மாறப் போவதில்லை. அதுதான் நல்லதும்கூட, ஏனெனில் இதுபோன்ற செயல்களால் இயக்கத்தின் கண்ணியமும் அதன் எல்லையும் சீர்குலைந்துவிடும். ஆம் ஆத்மி கட்சிக்குக் காலப்போக்கில் என்ன நிலை ஏற்பட்டது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது" என்றார்.

இளைஞர்கள் இயக்கத்தின் செய்தி

பாட்னாவில் உள்ள ஏ.என். சின்ஹா சமூக ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டி.எம். திவாகர் கூறுகையில், "போராட்டங்களில் இருந்துதான் அரசியல் கட்சிகள் உருவாகின்றன. கடந்த 1974 ஆம் ஆண்டு போராட்டத்தைக் கூட 'சத்ர சங்கர்ஸ் வாகினி' (மாணவர் போராட்டப் படை) தான் நடத்திக் கொண்டிருந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். பின்னர் இதிலிருந்துதான் ஜனதா கட்சி உருவானது, அவர்கள் மத்தியில் இந்திரா காந்தியின் அரசை தோற்கடித்தனர். அதன் பிறகு, மாணவர் இயக்கத்தின் தலைவர்கள்தான் பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகளை அகற்றினர்" என்றார்.

"சிஜேபி ஒரு அரசியல் கட்சி அல்ல, ஆனால் அவர்களின் செயல்திட்டம் அரசியல் சார்ந்தது. அவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், அவர்கள் கட்டமைப்பைச் சீரமைப்பது மற்றும் பாஜக-வை அகற்றுவது போன்ற விஷயங்களைப் பேசுகிறார்கள். சிஜேபி, 'ஜென் ஸி தலைமுறையைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வளர்ந்து வரும் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று நான் நினைக்கிறேன்" என டி.எம். திவாகர் மேலும் கூறினார்.

"1974 இல் மாணவர்கள் தாங்களாகவே ஜே.பி.யை (ஜெயபிரகாஷ் நாராயணன்) கேட்டு அவரைத் தங்களின் தலைவராக்கிக் கொண்டனர் என்றாலும், நீங்கள் கவனித்துப் பார்த்தால், ஆம் ஆத்மி கட்சியிலும் ஆரம்பத்தில் அரசியல் அனுபவம் உள்ள தலைவர்கள் எவரும் இல்லை. ஆனால் அவர்கள் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றார்கள்" என்றார்.

"சோனம் வாங்சுக் படித்தவர். அவர் ஒரு சிறந்த சமூக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவர், ஆனால் அவர் ஜே.பி. அல்ல. இந்தக் குறைபாடு 'ஜென் ஸி'-யின் இந்த இயக்கத்தில் எனக்குத் தெரிகிறது. ஆனால் சிஜேபி உறுப்பினர்களில் இருந்தே யாராவது ஒரு தலைவர் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன" என்றார்.

இந்தியாவில் சமீப காலங்களில் உருவான மிகவும் புதிய மற்றும் வெற்றிகரமான அரசியல் கட்சியைப் பற்றிப் பேசினால், அது 'ஆம் ஆத்மி கட்சி' தான். ஊழலை ஒழிப்பது என்ற பெயரில் நடந்து வந்த ஒரு போராட்டம், அரசியல் கட்சியாக மாறியது.

அவர்களின் தலைவர்களும் தங்களது போராட்டத்திற்குப் பின்னால் எந்தவொரு அரசியல் லட்சியமும் இல்லை என்பதை ஆரம்பத்தில் மறுத்து வந்தாலும் அவர்களின் போராட்டம் பல மாதங்கள் வரை நீடித்தது.

இத்தகைய சூழ்நிலையில், சில வாரங்கள் மட்டுமே ஆன சிஜேபியின் இந்த இயக்கத்தைப் பற்றி இப்போதே கணிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது.

கரப்பான் பூச்சி சின்னம்

பேராசிரியர் சுதீர் குமார், இது சிஜேபி அமைப்பை விடவும் மிகப்பெரிய எதிர்காலத்தைக் கொண்ட இந்தியாவின் மாணவர்களின் ஓர் இயக்கம் என்று நம்புகிறார்.

"இந்த இயக்கத்தின் ஒரு முக்கியமான விஷயம் 'கரப்பான் பூச்சி' சின்னம். இந்தச் சின்னம் நமது அரசியலில் மிகவும் வித்தியாசமானது. நமது சமூகத்தில் கரப்பான் பூச்சி மிகவும் மாறுபட்ட முறையில் பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

"போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நிறைவு செய்யும்போது அபிஜித் தீப்கே, கரப்பான் பூச்சிகளால் என்ன செய்ய முடியும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறினார். இது ஒரு மிகப்பெரிய செய்தியாகும். சமூகத்தில் யார் ஒடுக்கப்பட்டவர்களாகவும் நசுக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்களோ, யார் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்களோ, அவர்களின் குரலின் எதிரொலிதான் இது," என அவர் தெரிவித்தார்.

சுதீர் குமார், இளைஞர்களுக்கு வெறும் வாக்களிக்கும் உரிமை மட்டுமே தேவையானது அல்ல என்று நம்புகிறார். மாறாக தங்களின் அன்றாட வாழ்க்கையிலும் தங்களுக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர் என்றும், அந்தப் பங்கு எப்போதெல்லாம் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் உணர்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் வீதிகளில் இறங்கி அந்தப் பங்கை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.

பேராசிரியர் சுதீர் குமாரின் இந்த கருத்துடன் அசுதோஷும் உடன்படுவதாகத் தெரிகிறது.

"சிஜேபியின் இந்த இயக்கம் 'ஜென் ஸி' தலைமுறைக்குள் ஒரு ஜனநாயக உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளைஞர்கள் வெறும் மீம்களை உருவாக்குவதிலும், சமூக ஊடகங்களிலும் மட்டுமே மும்முரமாக இருக்கிறார்கள் என்று மக்கள் கூறி வந்தனர், ஆனால் மக்களின் அந்தப் மாயை உடைந்துள்ளது. தேவைப்பட்டால் தாங்கள் வீதியிலும் இறங்குவோம் என்பதை ஜென் ஸி நிரூபித்துக் காட்டியுள்ளது" என்று அசுதோஷ் கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "இளைஞர்கள் ஒரு சர்வாதிகார அரசை ஜனநாயகப் பாதைக்குத் திரும்பக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பையன், நாட்டின் பிரதமரே இரவு 12 மணிக்கு ரீல் வீடியோ போடும் அளவிற்கு ஒரு போராட்டத்தை இங்குக் கட்டியெழுப்புவான் என்று யார் நினைத்திருப்பார்கள்" என்றார்.

சமூக ஊடகங்களின் தாக்கம்

சிஜேபி முற்றிலும் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் உருவான ஒரு இயக்கமாகக் கருதப்படுகிறது. இதன் தொடக்கமும் சமூக ஊடகங்களிலிருந்தே நிகழ்ந்தது.

உண்மையில் மே 15 அன்று, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரிய ஒரு வழக்கறிஞரின் மனுவை விசாரித்துக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில், நீதித்துறையின் மீது அதிகரித்து வரும் 'தேவையற்ற தாக்குதல்கள்' குறித்து அவர் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்.

நீதிபதி சூர்யகாந்தின் அமர்வு, "சில இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காததாலும் மற்றும் தங்களின் தொழிலில் உரிய இடத்தை பெற முடியாததாலும் காக்ரோச் (கரப்பான் பூச்சி) போல எல்லா இடங்களிலும் பரவி விடுகிறார்கள்.

அவர்களில் சிலர் சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள், சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களாக மாறுகிறார்கள், சிலர் வேறு சில வகையான செயல்பாட்டாளர்களாக மாறுகிறார்கள், பின்னர் அனைவரின் மீதும் தாக்குதலைத் தொடங்குகிறார்கள்" என்று கூறியது.

இருப்பினும், ஊடகங்களின் ஒரு பகுதியினர் தனது கருத்துகளைத் தவறான முறையில் சித்தரித்துவிட்டதாக மே 16 அன்று அவர் கூறினார்.

'லைவ் லா' மற்றும் 'பார் அண்ட் பெஞ்ச்' ஆகியவற்றின் கூற்றுப்படி, அவர் தனது கருத்துக்கள் போலி பட்டப் படிப்புகளின் உதவியுடன் வழக்கறிஞர் போன்ற தொழில்களில் நுழைந்தவர்களுக்கு எதிரானது மட்டுமே என்றும், பொதுவாக இளைஞர்களுக்கு எதிரானது அல்ல என்றும் கூறினார்.

ஆனால், அதற்குள் அவருடைய கருத்தின் காரணமாகச் சமூக ஊடகங்களில் 'காக்ரோச்' என்ற வார்த்தையைக் கொண்டு பலரும் விவாதங்களைத் தொடங்கிவிட்டனர். இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக 'காக்ரோச் ஜனதா கட்சி' இருந்தது.

இன்ஸ்டாகிராமில் இதற்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் உருவாயினர்.

இங்கிருந்தே சிஜேபி சார்பாக நீட் வினாத்தாள் கசிவு குறித்த விவாதமும், அன்றைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையும் தொடங்கின. இந்தக் கோரிக்கையுடன் அவர்கள் முதன்முறையாக ஜூன் 6 அன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர், பின்னர் இந்தியாவின் பல நகரங்களிலும் போராட்டங்களை நடத்தினர்.

இறுதியாக அவர்கள் ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர், அதன் விளைவு ஜூலை 25 சனிக்கிழமை காணப்பட்டது, அப்போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.

"ஒரு மாதம் வரை வீட்டை விட்டு வெளியே தங்கியிருப்பது, பெற்றோரின் அழுத்தம், படிப்பின் அழுத்தம், எதிர்காலத்தின் அழுத்தம் என இது எளிதான விஷயம் அல்ல. சிஜேபி தனது இதர கோரிக்கைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும் கூட, அதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன"என்று சுதீர் குமார் சொல்கிறார்.

வரும் நாட்களில் அரசியல் கட்சிகள் அந்த விவகாரங்களை எவ்வாறு கையில் எடுக்கின்றன என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு