You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிஜேபி போராட்டத்தை மோதி அரசு கையாண்ட விதம் காங்கிரசுக்கு சாதகமாக அமையுமா?
- எழுதியவர், அர்ஷத் மிசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நாடு தழுவிய போராட்டங்களுக்கு இடையே, ஜூலை 25 அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், செய்தியாளர் சந்திப்பு நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார்.
மேலும், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டன.
இரு அவைகளிலும் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா மற்றும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர்.
இந்த அமளிக்கு மத்தியில், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது.
இந்த முழு விவகாரத்தால் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு அரசியல் பலன் கிடைத்துள்ளது என்பதே தற்போது எழும் கேள்வியாக உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான அரசியல் கருத்தாக்கத்தை உருவாக்குவதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனவா என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
'எதிர்க்கட்சிக்கு ஒற்றுமையே மிகவும் முக்கியம்'
காக்ரோச் ஜனதா கட்சியின்(சிஜேபி) நாடு தழுவிய இயக்கம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் அரசியல் எந்தத் திசையில் செல்லும் என்பது குறித்துப் பேசிய அரசியல் ஆய்வாளர் ஹேமந்த் அத்ரி, '’இந்த இயக்கத்தின் மிகப்பெரிய தாக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல் வலிமையை அதிகரித்ததல்ல. மாறாக, அவற்றுக்கிடையேயான ஒற்றுமையை வலுப்படுத்தியதே ஆகும். அதுவே எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான அம்சம்’’ என்றார்.
"இந்த இயக்கத்தை டெல்லிக்குள் மட்டுமே வரையறுத்துப் பார்க்கக் கூடாது. இது நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கமாகும். நாட்டின் பல பகுதிகளில் எழுந்த எதிர்ப்புக் குரல்களுக்கு இது ஒரு பொதுவான மேடையை வழங்கியது," என்று ஹேமந்த் அத்ரி கூறினார்.
மேலும், "இந்த இயக்கத்தின் போது, எதிர்க்கட்சிகள் முன்பை விட அதிக ஒருங்கிணைப்புடன் காணப்பட்டன. காங்கிரசுடன் சேர்ந்து திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்றிணைந்தன " என்றும் கூறினார்.
இந்த நிகழ்வு எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையக்கூடும் என அரசியல் ஆய்வாளர் ஆதேஷ் ராவல் கருதுகிறார்.
இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது என்பதால், இதன் முடிவை உடனே கணிப்பது முதிர்ச்சியற்றதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுகுறித்துப் பேசிய அவர், "எந்தவொரு அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு பெரிய மக்கள் இயக்கம் எழும்போது, அதற்கான அரசியல் பலன் பெரும்பாலும் எதிர்க்கட்சிக்கே செல்லும் என்பதை வரலாற்றில் நாம் பார்த்திருக்கிறோம். அண்ணா ஹசாரே இயக்கத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அந்த இயக்கத்தால் மிகப்பெரிய அரசியல் பலனைப் பெற்றது பாஜகதான்" என்றார்.
மேலும், "தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவும், 'இந்தியா' கூட்டணியின் முதன்மை முகமாகவும் உள்ளது. எனவே, அரசுக்கு எதிராக உருவாகும் எந்த பெரிய மக்கள் இயக்கமும் காங்கிரசுக்கு அரசியல் பலனை அளிக்கும் வாய்ப்பு அதிகம்" என்று கூறினார்.
'மோதி பிம்பத்திற்கு சவால் விடும் ஜென் ஸி தலைமுறை'
2013-க்கு பிறகு பிரதமர் நரேந்திர மோதி உருவாக்கிக் கொண்ட அரசியல் பிம்பத்திற்கு, இந்த இயக்கத்தின் போது ஜென் ஸி தலைமுறையினர் சவால் விடுத்துள்ளதாக ஹேமந்த் அத்ரி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முன் தங்களது பிரச்னைகள் குறித்து இளைஞர்கள் ஒரு வேறுபட்ட அரசியல் எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
"புதிய தலைமுறை, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் வாய்ப்புகள் போன்ற பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மதம் அல்லது சாதி அடிப்படையிலான அரசியலைவிட, தங்களது வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய கேள்விகளிலேயே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்," என்று அத்ரி கூறினார்.
மேலும், "எந்த இயக்கத்தின் தாக்கமும் அரசியல் கட்சிகளுக்குள் மட்டும் சுருங்கி விடுவதில்லை. அது பொதுமக்களின் பார்வையையும் மாற்றுகிறது. அந்த வகையில், இந்த இயக்கம் இளைஞர்களின் பிரச்னைகளை தேசிய அளவிலான விவாதத்தின் மையத்துக்கு கொண்டு வந்துள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தொண்டர்களுக்கு பதவியை விட நாடே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா குறித்து ஆதேஷ் ராவல், இது அரசாங்கத்தின் உத்தி சார்ந்த முடிவு என்று கூறினார்.
ஆதேஷ் ராவலின் கூற்றுப்படி, அரசியல் ரீதியிலான லாப நஷ்டங்களை மதிப்பீடு செய்த பிறகே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்தது.
"இந்த ராஜிநாமா அமைச்சரின் தனிப்பட்ட முடிவு அல்ல. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அளித்த அழுத்தத்தின் விளைவாக இது நிகழ்ந்தது. இந்த இயக்கத்தின் தாக்கம் டெல்லிக்குள் மட்டும் சுருங்கி இருக்கவில்லை. அது மேலும் விரிவடையும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, அரசியல் இழப்பை குறைப்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்தது," என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புதிய அரசியல் கருத்தாக்கத்தை உருவாக்குவதில் சிஜேபி இயக்கம் வெற்றி பெற்றுள்ளது என்று ஆதேஷ் ராவல் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, "கடந்த 12 ஆண்டுகளில் நடந்த வேறு எந்த இயக்கத்தையும் விட, கடந்த ஐந்து நாட்களில் பிரதமர் நரேந்திர மோதியின் பிம்பத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது".
"விவசாயிகளின் போராட்டம் நீண்ட காலம் நீடித்தது ஆனால் அது இந்த இயக்கத்தைப் போல பிரதமரின் தனிப்பட்ட பிம்பத்தை அந்த அளவுக்குப் பாதிக்கவில்லை" என்றார் ஆதேஷ் ராவல்.
மேலும்,"பாஜகவை விட பிரதமரின் பிம்பமே மிகப்பெரிய அரசியல் மூலதனமாக மாறியுள்ளது. எனவே அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பெரிய சர்ச்சையும் பிரதமரின் பிம்பத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி அடுத்து என்ன செய்யக்கூடும்?
டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பொறுப்பேற்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹேமந்த் அத்ரி, "பொறுப்புக்கூறல் என்ற கேள்வியை இனி எதிர்க்கட்சிகள் தர்மேந்திர பிரதானுடன் மட்டும் நிறுத்தப்போவதில்லை. அதனை உயர்மட்ட அரசியல் தலைமையுடன் இணைத்து அரசியல் பொறுப்பை நிர்ணயிக்க முயற்சிக்கும்," என்று கூறினார்.
வரும் காலங்களில் பாஜகவும் மத்திய அரசும் பல்வேறு பிரச்னைகளில் அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அத்ரி கருதுகிறார்.
ராமர் கோயில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், இ20 பெட்ரோல் கொள்கை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் போன்ற விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், எதிர்கால அரசியலில் இவை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு