You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'உறுதிமொழியை அரசு மீறுகிறது' - சிஜேபியின் புதிய குற்றச்சாட்டுகள் என்ன?
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் முடிவடைந்த பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அந்தச் சந்திப்பில், போராட்டங்கள் முடிந்த பிறகும் மாணவர்கள் காவல்துறையினரால் குறிவைக்கப்படுவதாக சிஜேபி குற்றம்சாட்டியது.
சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் பிற நிர்வாகிகள், வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபலுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதியை மத்திய அரசு மீறி வருவதாக சிஜேபி குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ, டெல்லி மற்றும் பிகாரில் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு குறிவைக்கப்படுவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பிறகு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்தி சிஜேபி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது.
கடந்த சனிக்கிழமை, தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா மற்றும் பிற கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தனது போராட்டத்தை சிஜேபி முடிவுக்கு கொண்டுவந்தது.
சிஜேபி முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
கடந்த ஜூலை 25ஆம் தேதி தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, சிஜேபி தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தையில், தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல், போராட்டக்காரர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யாதிருத்தல் உள்ளிட்ட சிஜேபியின் பிற கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
போராட்டம் முடிந்த பிறகு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதியும் வழங்கப்பட்டதாக சிஜேபி கூறியுள்ளது.
தற்போது அந்த உறுதி மீறப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சிஜேபி, இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
சட்ட வழக்குகள் தொடர்பாக அரசுடன் எட்டப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமைக்குள் வெளியிட வேண்டும் என்று சிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா வெளியிட்ட பதிவில், "போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதி முழுமையாக மீறப்பட்டு வருவதை நாங்கள் பார்க்கிறோம். பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் பிற இடங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "போராட்டக்காரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க உதவி செய்து வந்த தன்னார்வலர்கள் பலரும் டெல்லியில் தடுத்து வைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்து வருகின்றன," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். புதிய எஃப்ஐஆர்கள் பதிவு செய்யக்கூடாது. இது டெல்லி காவல்துறை, மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களின் காவல்துறைக்கும் பொருந்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும்," என்றும் ரங்கா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், என்.எஸ்.யு.ஐ. தலைவர் ரிச்சா சிங் செய்தியாளர் சந்திப்பில், "பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கடுமையாக தாக்கிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பாட்னா பல்கலைக்கழக மாணவர் தலைவர் சாந்தனு சேகர் உள்ளிட்ட எங்கள் அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்," என்று குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், "அதிகாலை 2 மணியளவில் பல பெண் செயற்பாட்டாளர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். எங்கள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது அவர்களது குடும்பத்தினருக்குக் கூட தெரியாத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தப்படுகின்றனர். அவர்களை குறிவைத்து தரக்குறைவான கருத்துகள் பதிவிடப்படுகின்றன," என்றும் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு