கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

கரூரில் தவெக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-ஆவது பிரிவுகளுக்கு நேரடியாக முரணானவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், "இந்தச் சம்பவத்திற்காக கருணை அடிப்படையிலான நியமனங்கள் வழங்கப்பட்டால், இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இதேபோன்ற வேலைவாய்ப்பை கோரி முன்வர வழிவகுக்கும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அரசு இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் போது, நிர்வாக அதிகாரத்தின் பயன்பாடு அரசியலமைப்புச் சட்ட வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"நிர்வாக நடவடிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால், குழப்பமே நிலவும்," என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், "அரசுப் பணியிடங்கள் மாநில அரசால் எளிதில் வழங்கப்பட வேண்டியவை அல்ல. அவை தகுதியின் அடிப்படையில் பெறப்பட வேண்டியவை. அவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் உணரப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பலர் உள்ளனர்," என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'நாளைக்கு வேலைக்குப் போவதா, வேண்டாமா என்றும் தெரியவில்லை'

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தனருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிய அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது பற்றி, இந்த வேலைவாய்ப்பைப் பெற்ற குடும்பத்தினர் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது. ஆனால் இப்படியொரு நீதிமன்ற உத்தரவு வந்ததே பலருக்கும் அப்போது தெரியவில்லை. இதுபற்றித் தெரிந்த சிலரும், தங்களுக்கு அலுவலகத்திலிருந்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறினர்.

விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கரூர் ஏமூரைச் சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியதர்ஷிணி, மகள் தரணிகா இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

பட்டதாரியான சக்திவேலுக்கு சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணி நியமனம் வழங்கப்பட்டிருந்தது. பிபிசியிடம் பேசிய சக்திவேல், ''நான் ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு, முதல்வர் கையிலிருந்து இந்த பணி நியமன ஆணையை வாங்கினேன். இப்போதுதான் நீதிமன்ற உத்தரவு பற்றித் தெரியவந்தது.'' என்றார்.

''இந்த வேலையை நம்பித்தான் ஏற்கெனவே இருந்த வேலையை ராஜினாமா செய்தேன். இப்போது இந்த வேலையும் போய்விடுமென்ற தகவல் கேட்டு பெரும் அதிர்ச்சியாகவுள்ளது. மீண்டும் பழைய பணியில் சேர முடியுமா என்றும் தெரியவில்லை. நாளைக்கு வேலைக்குப் போவதா வேண்டாமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் முதல்வர் விஜய் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து நாங்கள் தொடர்ந்து இந்த பணியில் இருப்பதற்கான உத்தரவைப் பெறுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.'' என்றார் சக்திவேல்

விஜய் பரப்புரையின்போது 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரம் அருகிலுள்ள கோதூர் சாலையில் வசிக்கும் பெருமாள்–செல்வராணி தம்பதியரின் 2 மகள்கள் பழனியம்மாள், கோகிலா ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் மற்ற இரு குழந்தைகளும் பள்ளியில் படித்து வருகின்றனர். குடும்பத்தில் ஏழாம் வகுப்புப் படித்துள்ள செல்வராணிக்கு மாவட்ட வருவாய் அலகில் மசால்ஜி பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய செல்வராணியின் கணவர் பெருமாள், ''எனது மனைவி வேலைக்குச் சென்றிருக்கிறார். இப்போதுதான் டிவியில் பார்த்து நீதிமன்ற உத்தரவு குறித்து தெரிந்து கொண்டேன். அரசு என்ன செய்யப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. விஜய் எத்தனையோ தடைகளைக் கடந்து, முதல்வராக வந்திருக்கிறார். அவர் முயற்சி எடுத்தால் மேல் நீதிமன்றத்துக்குச் சென்று ஜெயிப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.'' என்றார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துருவிஷ்ணுவின் தந்தை விமல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி இழந்தவர். அவருக்கு அலுவலக உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது. பிபிசியிடம் பேசிய அவர், ''நானும் முதல்வர் கையிலிருந்து பணி நியமன ஆணை வாங்கினேன். நேற்று குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டு இன்றுதான் திரும்பினேன். நீங்கள் சொல்லும் வரை நீதிமன்ற உத்தரவு குறித்து எதுவும் தெரியாது. அரசாணை ரத்தாகிவிட்டால் அரசு என்ன செய்யுமென்று தெரியவில்லை.'' என்றார்.

இவர்களைத் தவிர்த்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்த தாமரைக்கண்ணனின் மனைவி தீபலட்சுமி, பிஎஸ்சி பட்டதாரி. அவருக்கு ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டிருந்தது. அவர் பணிக்குச் சென்றிருந்த நிலையில், தாமரைக்கண்ணனின் தந்தை நடராஜ் பிபிசியிடம் பேசினார். அவர் கூறுகையில், ''இப்போது வரையிலும் நீதிமன்ற உத்தரவு பற்றி எதுவும் தெரியாது. என்னுடைய மருமகளிடமும் இப்போது போன் எதுவும் கையில் இல்லை. அதனால் அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.'' என்றார்.

என்ன நடந்தது?

2025 செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஜூலை மாதம் 10-ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், ஆகியோருக்கு பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், மோனிஷா, சந்திரகலா, ம.பிரிதர்ஷினி, பிரபாகரன், மல்லிகா, தீபலட்சுமி, நிவேதிதா, அஷ்வின்குமரன், சந்தியா ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் பதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

காவல்துறையில் மகாலட்சுமி, தனலட்சுமி இருவருக்கும் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. செ.பிரபாகரன், ஷர்மிளா இருவருக்கும் பதிவுத் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகருக்கு பேரூராட்சிகள் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, சதீஸ்குமார், விமல், செல்வராணி மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அகிலாவுக்கு வழங்கப்பட்டது.

மேலும், கரூர் மாவட்ட அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கு முருகன் மற்றும் சுதன் என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட வருவாய் அலகில் மசால்ஜி பணிக்கான ஆணை செல்வராணிக்கு வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார், ரகுநாதன் ஆகியோருக்கு மாவட்ட வருவாய் அலகில் இரவுக் காவலர் பணிக்கான ஆணையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கு பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியின் இரவுக் காவலர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டன.

விஜய் பேசியது என்ன?

பின்னர் கரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில காயங்களை, வலிகளை மறக்க முடியாது. எல்லாவற்றையும்விட எனக்கு மிகப்பெரிய வலி என்றால் அது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்தான்."

"மக்களைச் சந்தித்து, அவர்களது பிரச்னைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் பிரசாரங்களில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் எனப் பயணம் செய்தோம். அதேபோல, அரியலூர் கூட்டம் முடித்து பெரம்பலூர் செல்ல ஆயத்தமானபோது, பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக உள்ளது, செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறினார்கள். எனவே நாங்கள் பெரம்பலூர் கூட்டத்திற்குச் செல்லவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்."

"அதேபோல நாமக்கல் பிரசார கூட்டம் முடித்துவிட்டு கரூர் வரும்போது, கரூர் காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா? கரூரில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வர வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம் அல்லவா?" என்று கேள்வியெழுப்பினார்.

அதோடு, "பிறகு ஏன் என்னை காவல்துறையே வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்றிருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்" என்றும் குறிப்பிட்டார்.

மேலும், "என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. நமக்கு ஏற்பட்ட இந்த வேதனையான சம்பவத்தை அடுத்து வரக்கூடிய தலைமுறைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, இனி இப்படியொரு அரசியல் சதியை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, கரூரில் ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பாக அமைக்கப்படும்" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு