'வேறொரு குடும்பத்தில் இறுதி சடங்கு' - கடைசி நேரத்தில் தெரிந்த உண்மையால் மகளின் சடலத்தை மீட்ட தந்தை

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இறந்த இளம்பெண் ஒருவரின் சடலம் வேறொரு குடும்பத்துக்கு மாற்றி வழங்கப்பட்டு, அச்சடலத்துக்கு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வேறொரு குடும்பத்தினரிடம் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தன் மகள் உயிரிழந்த சோகத்தில் இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக, பெண்ணின் தந்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இறந்த பெண்ணை குடும்பத்தினர் தவறாக அடையாளம் கண்டதால் இந்த குழப்பம் நேர்ந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். என்ன நடந்தது?

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏடூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அனுஷ்கா. இவர் இந்தாண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் சேருவதற்கு தயாராக இருந்துள்ளார். அதே போன்று, சென்னை மணலியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, இவர் இரண்டாமாண்டு கல்லூரி மாணவியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அனுஷ்கா, பிரியதர்ஷினி இருவரும் வெவ்வேறு காரணங்களால் இருவேறு சம்பவங்களில் தற்கொலை மூலம் சமீபத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, தொடர்புடைய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இருவருடைய உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இதில், ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அனுஷ்காவின் உடல் பிரியதர்ஷினியின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அனுஷ்காவின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு சென்றபோதுதான் இச்சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.

பின்னர்தான் ஆரம்பாக்கம் போலீஸார் மணலி போலீஸாருக்கு இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.

"ஆனால், அதற்குள் என் மகளுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இடுகாட்டில் புதைக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். 10 நிமிடம் தாமதமாக சென்றிருந்தால் என் மகளின் உடலை கூட என் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்க முடியாது" என்கிறார், அனுஷ்காவின் தந்தை சுமன்.

பிபிசி தமிழிடம் பேசிய சுமன், "எனக்கு இரு மகள்கள். இளைய மகள் அனுஷ்காதான் இறந்துவிட்டாள். பிளஸ் 2 வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிட்டதாக மனவருத்தத்தில் இருந்தாள். இருந்தாலும், அவளின் விருப்பப்படி பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான கட்டணம் கூட கல்லூரியில் செலுத்திவிட்டோம். ஆனால் இப்படி செய்துவிட்டாள். அந்த வருத்தத்தில் இருக்கும் எங்களுக்கு, மகளின் உடலை வேறொரு குடும்பத்துக்கு தவறாக அனுப்பியது மேலும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார்.

அவரது கூற்றுப்படி, அனுஷ்காவின் உடல் பிரியதர்ஷினியின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

"என் மகளின் உடலை இன்னொரு குடும்பத்துக்கு வழங்கிவிட்டனர். அவ்வளவு அலட்சியமாக மருத்துவமனையில் இருந்துள்ளனர். இறந்த என் மகளின் இறுதிச் சடங்கைக் கூட என்னால் நிம்மதியாக மேற்கொள்ள முடியவில்லை. பிணவறையில் வேலை பார்ப்பவர்களால்தான் இது நிகழ்ந்துள்ளது. சடலங்களுக்கு டோக்கனை மாற்றிவிட்டனரா? இந்த தவறு எப்படி நடந்திருக்கும்? 10 நிமிடம் தாமதித்து சென்றிருந்தால் என் மகளை புதைத்திருப்பார்கள்." என்றார்.

பின்னர், இருதரப்பு போலீஸாரின் தலையீட்டை அடுத்து, அனுஷ்காவின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போன்று, பிரியதர்ஷினியின் உடலை அவரது குடும்பத்தினர் அடையாளங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிணவறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சடலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட என்ணுடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டிருக்கும் என்று கூறிய சுமன், அதே டோக்கன் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் என்றார்.

"அந்த டோக்கன், சடலத்தின் அடையாளங்கள், விவரங்களை சரிபார்க்காமலேயே ஒப்படைத்துவிடுவார்களா?" என கேள்வி எழுப்பினார்.

பிரியதர்ஷினியின் குடும்பத்தினரிடம் பேசுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏறக்குறைய ஒரே வயது, ஒத்த உடலமைப்பு, ஆடை போன்ற ஒத்த விஷயங்களால் சடலம் மாறியிருக்கலாம் என, மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டான்லி அரசு மருத்துவமனை தலைவர் அரவிந்த், "இச்சம்பவம் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியுள்ளோம். விசாரணை முடிந்த பின்னர் உரிய தகவல்கள் வழங்கப்படும். மாறி பெறப்பட்ட (அனுஷ்கா) சடலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்." என்றார்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு